News

அனோஜனை விடுதலை செய்யக் கோரி சவூதி அரேபியாவுக்கு வேண்டுகோள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி சவூதி அரேபியாவுக்கு வேண்டுகோள்

சமூகச் செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

நூருல் ஹுதா உமர்

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த அனோஜனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும், இது தொடர்பில் சவூதி அரேபிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், பொதுமக்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

கல்முனை நற்பிட்டிமுனை பகுதியில் இன்று நடைபெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பில் மீளாய்வு செய்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை சவூதி அரேபிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும், இலங்கை அரசாங்கமும் இவ்விடயத்தில் உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தி, சட்டரீதியான நடைமுறைகள் மற்றும் மனித உரிமை தொடர்பான விடயங்களை உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு தங்களது கவலையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

அனோஜனின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் உரிய முறையில் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரதான கோரிக்கையாக இருந்தது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button