News

HIV எய்ட்ஸ் பாதிப்பு அதிகம் உள்ள 21 நாடுகளில் இலங்கைக்கு 17வது இடம் !!

ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் தடுப்புத் திட்டத்தின்படி, எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் போக்குக் காணப்படும் உலகின் 21 நாடுகளில் இலங்கைக்கு 17வது இடம் கிடைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டு வரை உலகளவில் இதன் வளர்ச்சி 20 சதவீதமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஆர்மீனியா, பங்களாதேஷ், பிரேசில், காங்கோ, கோஸ்டாரிகா, எகிப்து, கிர்கிஸ்தான், மடகாஸ்கர், நைஜீரியா, பாகிஸ்தான், பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், செனகல், இலங்கை, சூடான், துனிசியா, வெனிசுலா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் இதில் அடங்குகின்றன.

2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டளவில் உலகளவில் எய்ட்ஸ் நோயாளர்கள் பதிவளாவதில் 40 சதவீதம் குறைவடைந்திருந்தாலும், அதே காலப்பகுதியில் இலங்கையில் எய்ட்ஸ் நோயாளர்கள் கண்டறியப்படுவது 48 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றாளர்கள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 639 எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றாளர்கள் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளதுடன், இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 6 சதவீத அதிகரிப்பாகும். தற்போதைய தரவுகளின்படி, நாட்டில் 4,900 – 6,500 வரையிலான எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தேசிய பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத் திட்டத்தின் விசேட மருத்துவர் சத்யா ஹேரத் குறிப்பிடுகையில், பெண்களை விட ஆண்களே எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், அதற்கு போதைப்பொருள் பாவிப்பதற்கான ஊசிகள் பயன்படுத்தப்படுவதே காரணமா என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளதாகவும், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் நோயைக் கண்டறிதல் மற்றும் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக குறித்த இரு மாவட்டங்களிலும் நடமாடும் மருத்துவக் கிளைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button