News

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் மட்டமான செயற்பாடுகளினாலேயே தியாத தீபம் திலீபனின் நினைவேந்தல் மற்றும் சிலை கொச்சைப்படுத்தப்பட்டது ; என்.எம்.அப்துல்லாஹ்

தமிழ் அரசுக் கட்சி, சுமந்திரன், சீ.வீ.கே சிவஞானம் உள்ளிட்டவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் அரசியல் செய்யத் திராணி அற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் மட்டமான செயற்பாடுகளினாலேயே தியாத தீபத்தின் நினைவேந்தல் மற்றும் சிலை கொச்சைப்படுத்தப்பட்டது.

இது கண்டனத்திற்குரியது என மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

கடந்த 07.10.2026 ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகரசபையின் 10ஆவது அமர்வின் போது தற்காலிகமாக வழங்கப்பட்ட சிலைக்கான அனுமதி தொடர்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரின் கருத்துக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிட்டிருந்த விடயங்களாவது.

யாழ்ப்பாணம் மாநகரசபையின் கடந்த செப்டம்பர் மாத்தின் மாதாந்தக் கூட்டத்தில் உறுப்பினர் சே.மதுசிகான் அவர்களினால் கொண்டுவரப்பட்ட அவசர பிரேரணைக்கு அமைவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமான தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை முன்னிட்டு பைபரினால் ஆன சிலையை 12 நாட்களுக்கு வைத்து நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள சபை அனுமதி வழங்கியிருந்த நிலையில் இத தொடர்பில் சமூகத்தில் பல்வேறு குழப்பங்களும், உண்மைக்கு மாறான தகவல்களும் வெளிவந்து கொண்ட இருந்தது.

எனவே இவ் விடயம் தொடர்பில் மக்களின் தெளிவுபடுத்தல்களுக்காக பல்வேறு உண்மைகளையும், இவ் விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சதித் திட்டங்களையும் வெளிக்கொணர வேண்டும் என்றும் குறிப்பிட்டு பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார்.

கடந்த 2026.09.15 ஆம் திகதி அமர்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் மாநகரசபை உறுப்பினர் மதுசிகான் அவர்களால் விசேட பிரேரணை சபைக்கு சமர்பித்து உரையாற்றுகையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஆரம்ப நாளான இன்று (15) பைபரினால் ஆன சிலையை வைத்து அஞ்சலி நிகழ்வுகளை செய்த பின்னர் மதிய இடைவேளையின் போது வைக்கப்பட்ட சிலை தொடர்பில் எழும் சட்ட சிக்கல்களை தவிர்த்துக் கொள்வதற்காகவே நினைவேந்தல் குழுவின் கோரிக்கைக்கு அமைவாக சிலைக்கான அனுமதியைக் கோரியிருந்தார்.

தியாக தீபத்தின் தியாகத்தை மதிக்கும் வகையிலும், நினைவேந்தலை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலை அகற்றப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவுமே முதல்வர் மேற்படி பிரேரணையை முன்வைத்த சபையில் சபையிலிருந்த அனைத்துக் கட்சிகளும் தமக்கிடையிலான கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் முதல்வர் குறிப்பிட்டதற்கு அமைவாக 12 நாட்களுக்கு மாத்திரம் (15.09.2026 தொடக்கம் 26.09.2026 வரை) சிலையை வைப்பதற்கான அனுமதியை வழங்குவது என சபை தீர்மானித்திருந்தது.

இந் நிலையில் சிலை அனுமதி விவகாரம் தொடர்பில் பொதுவான பொலிஸ் விசாரணை நடவடிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து முதல்வரிடம் குறித்த அனுமதி கோரியிருந்த தரப்பிடமிருந்து சபை அனுமதிக்கு அமைவாக 26.09.2026 சிலை அகற்றப்படும் என்ற உத்தரவாதக் கடிதத்தை பெற்றுத்தருமாறு கேட்கப்பட்டடிருந்தது.

இது தொடர்பில் பிரேரணையை கொண்டு வந்த உறுப்பினர் மதுசிகான் அவர்களுக்கு நேரடியாகவும் மற்றும் முதல்வர் அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் கதைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆவர்களிடம் தொலைபேசியிலும் முதல்வர் கடிதத்தை கோரிய போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தானும், நினைவேந்தல் குழுவும் கடிதம் தர முடியாது என்று மறுத்திருந்ததோடு, விசேட பிரேரணை கொண்டு வந்த உறுப்பினரையும் கடிதத்தை கொடுக்க விடவில்லை. 

மாறாக சிலைக்கு சபைத் தீர்மானம் 26.09.2026 வரை மாத்திரம் தான் என்பதை எழுத்து மூலம் பொலிஸாருக்கு அறிவித்து விட்டு விடுமாறும் குறிப்பிட்டிருந்தமை எல்லோருக்கும் சுட்டிக் காட்டினார்.

எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு நன்றா தெரியும் 26ஆம் திகதி சிலையை தாமாக சபை அனுமதிக்கு அமைவாக அகற்றா விட்டால் 27ஆம் திகதி சட்டப்படி பொலிஸார் கைவைப்பார்கள் என்று. அதனை வைத்து தமது சுயநல அரசிலை செய்யலாம் என்ற திட்டத்தின் பிரகாரமே சிலை பொலிஸாரால் அகற்றப்பட்ட பின்னர் அரசாங்கத்தையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் மற்றும் மாநகரசபை முடிச்சுப் போட்டு அரசியல் சித்து விளையாட்டை நிகழ்த்தியிருக்கின்றார்கள்.

இது கஜேந்திரன், கஜேந்திரகுமார் உள்ளிட்டவர்களின் திட்டமிட்ட அரசியல் நாடகம் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் வடக்கு கிழக்கிலே தமிழ் பேசும் மக்களின் ஏக பிரதிநிதியாக தமிழ் அரசுக் கட்சி எட்டு (8) பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தலைமைத்துவம் கொடுத்து வருவதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழ் அரசுக் கட்சியை மக்களிடமிருந்து தூரப்படுத்துவதற்காக எடுத்த பல்வேறு முயற்சிகளில் ஒன்றே இந்த திட்டமிட்ட சதி மற்றும் போலிக் குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டார்.

பொதுவாகவே தியாக தீபம் திலீபன் நினைவேந்தல், மாவீரர் நாள் நினைவேந்தல், தையிட்டி விகாரை அகற்றம் உள்ளிட்ட விவகாரங்களை தமது கட்சிக்கு மாத்திரமே உயில் எழுதிக் கொடுக்கப்பட்ட ஒன்று என்ற நினைப்பில் புலம் பெயர் தமிழ் சமூகத்தை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடாத்தி வருபவர்களின் பிழைப்புக்களில் ஒன்றாகவே சிலை விவகாரமும் வேண்டும் என்றே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம்.

அவ்வாறு அவர்கள் சிலை அகற்றலுக்க எதிராக போராடுவதாயின் அதனை அகற்றிய பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அதனை தற்காலிகமாக வைப்பதற்கும், நினைவேந்தல் காலம் முடியும் வரையும் அனுமதி வழங்கியிருந்தவர்கள் என்ற வகையில் நாமும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருப்போம். இது வேண்டும் என்று திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம்.  மேலும் தமக்குத் தேவையான அதிகாரத்தில் இல்லாத சிங்கள தரப்பை திருப்திப்படுத்துவதற்காக மீண்டும் அரியணைக்கு கொண்டு துடிக்கும் வழமையான நடவடிக்கையில் இதுவும் ஒன்று என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர்) தமிழ் அரசுக் கட்சி, சுமந்திரன், சீ.வீ.கே என்ற பெயர்களை குறிப்பிடாமல் அரசியல் செய்ய திராணியற்றவர்கள். அவ்வாறானவர்களின் திட்டமிட்ட செயற்பாடுகளே இந்த தியாகியின் நினைவேந்தல் நிகழ்வு இவ்வளவு கொச்சைப்படுத்தப்படுவதற்கும், சிலை தற்போது பொறுப்பேற்க யாருமற்ற நிலையில் நீதிமன்றில் அனாதரவாக வைக்கப்பட்டிருப்பதற்கும் காரணமாகும்.

நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ள பைரினால் ஆன சிலையை தாம் தான் செய்தோம், அது தமக்குரியது என்று பொறுப்பேற்ற திராணியற்றவர்கள் எதற்காக வழமையாக நினைவேந்தலை மேற்கொள்ள இருந்த உரித்தையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இவ்வாறான சதி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

உண்மையில் சிலை செய்வதற்காக பல்வேறு இலட்சங்களில் நிதி சேகரிக்கப்பட்டதாகவும், வெண்கல சிலை என்று அறவீடுகளை செய்து, பைபரில் சிலையை செய்துள்ளதாகவும் பத்திரிகை செய்திகள் உள்ளிட்ட பல்வேறு செய்திகள் உலாவருகின்றது.

நினைவேந்தலை வைத்து யாரேனும் தமது பைகளை நிரப்ப முற்பட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே உரிய பொறுப்பாளர்கள், நிதி அறவிட்டவர்கள் தான் தாமாக முன்வந்து சிலைக்கான வரவு செலவு தொடர்பிலும் தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக நிதி வழங்குபவர்களும் எதிர்காலத்தில் இவ்வாறான ஏமாற்று நடவடிக்கைகள் தொடர்பில் விளிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எனவே சபையில் தற்காலிகமாக 12 நாட்கள் அதாவது நினைவேந்தல் காலப்பகுதி 2020.09.26 வரையே அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், தமது சுயநல அரசியல் நாடகங்களுக்காகவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் தங்கள் வழமையாள அரசியல் சித்து விளையாட்டுக்கள் போன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், மாநகர முதல்வர் உள்ளிட்ட மாநகரசபையின் மீது திட்டமிட்டு குற்றச்சாட்டுக்கள் மற்றும் பழியை சுமத்த வெளிக்கிட்டிருந்தார்கள் என்றும், அது அவர்களுக்கே வினையாக மாறி பிசுபிசுத்துப் போயுள்ளது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மாநகரசபை உறுப்பினரின் ஊடகப்பிரிவு
என்.எம்.அப்துல்லாஹ்
யாழ் மாநகரசபை

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button