ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையால் முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன

ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையால் முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன
2026 அக்டோபர் 12
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் ஹிஜாப் மற்றும் மத அடிப்படையிலான உடைகளை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையால் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தீர்மானித்துள்ளது.
2026 அக்டோபர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட தனது தீர்மானத்தில், வைத்தியசாலை நிர்வாகம் குறித்த பெண் ஊழியர்களின் மதச் சுதந்திரம், சமத்துவம், பாகுபாடின்றி நடத்தப்படுவதற்கான உரிமை மற்றும் சட்டபூர்வமான தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமை ஆகியவற்றை சட்டவிரோதமாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடு, சுகாதார அமைச்சின் நியமனத்தின் பேரில் 2026 ஆகஸ்ட் 6 ஆம் திகதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியில் இணைந்த ஆறு முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களால் முன்வைக்கப்பட்டது.
முறைப்பாட்டின்படி, பணியில் இணைந்தபோது நடைபெற்ற அறிமுக நிகழ்வில், ஹிஜாப், நீளக் கை ஆடை மற்றும் சீருடையுடன் அணிந்திருந்த நீளக் காற்சட்டை ஆகியவற்றை அகற்றுமாறு வைத்தியசாலை அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவ்வாறு செய்யாவிட்டால் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட அனுமதிக்கப்படமாட்டார்கள் என எச்சரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது முஸ்லிம் பெண் ஊழியர்களில் மூவர் இந்த உத்தரவுக்கு இணங்கியிருந்தாலும், ஆறு பேர் மறுத்தனர்.
முறைப்பாட்டாளர்களின் கூற்றுப்படி, பின்னர் அவர்களுக்கு உடை விதிமுறையை ஏற்றுக்கொள்வது, இடமாற்றத்தை ஏற்குவது அல்லது பதவி விலகுவது என்ற தெரிவுகள் வழங்கப்பட்டதுடன், வாய்வழி அச்சுறுத்தல்களும் மனஅழுத்தங்களும் ஏற்படுத்தப்பட்டன.
இதற்கு பதிலளித்த வைத்தியசாலை நிர்வாகம், தாங்கள் அரச சேவைக்கான சீருடை தொடர்பான பொது நிர்வாக சுற்றறிக்கைகளையே நடைமுறைப்படுத்தியதாக தெரிவித்தது.
எனினும், விசாரணையின் பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழு, 1989 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளின் சம்பந்தப்பட்ட சுற்றறிக்கைகளில் எதிலும் மத அடிப்படையிலான தலை மறைப்பு அல்லது ஒழுக்கமான கூடுதல் ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்று கண்டறிந்தது.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் உள்ள மற்றொரு அரச வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்கள் இதேபோன்ற மத ஆடைகளை அணிய அனுமதிக்கப்பட்டிருந்தமையும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.
எனவே, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிர்வாகம் சுற்றறிக்கைகளை விளக்கிய விதம் தன்னிச்சையானது, நியாயமற்றது மற்றும் பாகுபாடானது என ஆணைக்குழு தீர்மானித்தது.
ஒழுக்காற்று விசாரணை எதுவும் இன்றி முறைப்பாட்டாளர்களை இடமாற்றம் செய்ததும் அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறிய செயல் எனவும் ஆணைக்குழு தெரிவித்தது.
ஆணைக்குழுவின் தீர்மானத்தின்படி, வைத்தியசாலை நிர்வாகம் இலங்கை அரசியலமைப்பின் 10, 12(1), 12(2), 14(1)(e) மற்றும் 14(1)(g) ஆகிய உறுப்புரைகளின் கீழ் பாதுகாக்கப்பட்ட மதச் சுதந்திரம், சமத்துவம், பாகுபாடின்றி நடத்தப்படுவதற்கான உரிமை மற்றும் சட்டபூர்வமான தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமைகளை மீறியுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள்
நிர்ணயிக்கப்பட்ட சீருடையுடன் இணைந்து ஹிஜாப், நீளக் கை ஆடை மற்றும் நீளக் காற்சட்டை அணிய அனுமதிக்கும் வகையில் எழுத்துமூல உத்தரவை வெளியிட வேண்டும்.
ஊழியர்கள் முன்வைத்த அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்.
ஆறு முறைப்பாட்டாளர்களுக்கும் மீண்டும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.
அவர்கள் மீண்டும் பணியில் இணைந்தால், மத அடிப்படையிலான ஆடைகளை அணிவதற்கு முழுமையான அனுமதி வழங்கப்பட வேண்டும்.
நாடு முழுவதற்குமான முக்கிய பரிந்துரை
இந்த வழக்கைத் தாண்டி, அரச நிர்வாக அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு, அரச ஊழியர்கள் தங்களது சீருடையுடன் மத அடிப்படையிலான ஆடைகளை அணியலாம் என்றும், ஆனால் முகம் தெளிவாக அடையாளம் காணப்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், மத ஆடைகளுக்கு எதிரான தன்னிச்சையான தடைகள் பணியிடங்களில் விரோதமான சூழலை உருவாக்கி, சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் பாதிக்கக்கூடும் என ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்ற அறிக்கையை 2026 நவம்பர் 11 ஆம் திகதிக்குள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான முபாரக் முஅஸ்ஸம், றுடானி ஸாஹிர் மற்றும் நப்ரத் நஜிமுதீன் ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குளுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகி இருந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.



