இன்று இறுதி நாளில் மகா சங்கத்தினரான நாங்கள் நாட்டின் நான்கு திசைகளில் இருந்தும் வந்து கொழும்பில் ஒன்றிணைவோம் – ஞானசார தேரருக்கு விடுதலை வழங்க வேண்டும்.. இல்லாவிட்டால் இன்று இரண்டில் ஒன்றை தீர்த்துக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் ; தேரர்கள் தெரிவிப்பு

கலபொடாத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பமான ‘சீவரத்துக்கான நீதி – சுதந்திரத்திற்கான பாதயாத்திரை’ நிறைவடைவதை முன்னிட்டு, இன்று (15) கொழும்புக்கு வருகை தரவுள்ளது.
கடந்த 10ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் ஆரம்பமான இந்தப் பாதயாத்திரை, கடுகண்ணாவை, கேகாலை, வரக்காபொல, நிட்டம்புவ ஆகிய நகரங்களைக் கடந்து, நேற்று (14) கடகடவத்தவுடன் நிறைவடைந்தது.
அதற்கமைய, இன்று காலை கடுகடவத்தில் ஆரம்பமாகும் பாதயாத்திரை கொழும்பு நோக்கி வருகை தரவுள்ளது.
பாதயாத்திரை மற்றும் அதன் நிறைவு தொடர்பில் இன்று கருத்துத் தெரிவித்த உளப்பனே சுமலங்க தேரர்,
“இன்று எங்களின் கடைசி நாள். மகா சங்கத்தினரான நாங்கள் நான்கு திசைகளில் இருந்தும் வெறுங்கையுடன் செல்வதற்காக வரவில்லை என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம்.
எனவே, கௌரவ தலைவர் தேரர்கள் உள்ளிட்ட அனைவரின் எதிர்பார்ப்பான ஞானசார தேரருக்கு விடுதலையை வழங்குமாறு அரசாட்டத்தை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு சொல்லியும் கேட்காவிட்டால், வேறு விதமாக புரிய வைப்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை இந்த வேளையில் அரசாங்கத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜனாதிபதி எங்கு இருக்கிறாரோ, அந்த இடத்திற்கு நாம் கொழும்புக்கு வர எதிர்பார்க்கிறோம்.
பலவத்தைக்கு என்றால் பலவத்தைக்கு, நாடாளுமன்றத்திற்கு என்றால் நாடாளுமன்றத்திற்கு, ஜனாதிபதி மாளிகைக்கு என்றால் அந்த இடத்திற்கு என எங்கு அழைத்தாலும் வர தயாராக இருக்கிறோம்.
அந்தச் செய்தி கிடைக்கும் வரை நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இல்லையெனில், ஜனாதிபதி இருக்கும் இடத்திற்கு வர நாங்கள் தயார். இன்று இரண்டில் ஒன்றை தீர்த்துக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அரசாங்கத்திற்கு அதனை வலியுறுத்திக் கூறுகிறோம். இவ்வாறான அகிம்சை முறையில் சொல்லியும் புரியவில்லையென்றால், ஜனாதிபதிக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.
இதற்கிடையில், தற்காலத்தில் பிக்கு சமூகம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கலாநிதி பூஜ்ய பெல்லன்வில தம்மரதன தேரர் தெரிவித்தார்.



