மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் ஆபத்து உள்ளது – Advocata எச்சரிக்கை
இலங்கை எரிபொருள் சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்தாமல், அரசு மற்றும் தனியார் துறைக்கு இடையே எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு முறையான பொருளாதார மற்றும் சட்டப்பூர்வ தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசைகள் (පෝලීම්) உருவாகும் அபாயம் உள்ளதாக ‘அட்வொகாட்டா’ (Advocata) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
‘Advocata Plus’ ஊடாக பொருளாதார பகுப்பாய்வு ஒன்றை முன்வைத்து அவர் இதனை வலியுறுத்தினார். மேலோட்டமான அரசியல் பிரகடனங்களுக்கு அப்பால் சென்று, நாட்டின் பெட்ரோலிய சந்தையில் காணப்படும் உண்மையான கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வு காண்பது அரசாங்கத்தின் முதன்மைக் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முக்கியப் பிரச்சினைகள் மற்றும் காரணங்கள்:
1. சமமற்ற போட்டிச்சூழல்:
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் (CPC) சந்தைக்கு புதிதாக நுழைந்த Sinopec, LIOC போன்ற தனியார் நிறுவனங்களுக்கும் இடையே நியாயமான அல்லது சமமான போட்டிச்சூழல் இல்லை என தனநாத் பெர்னாண்டோ சுட்டிக்காட்டுகிறார்.
2. வரியிலுள்ள சலுகைகள்:
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க மற்றும் பிற வரிகள் குறைந்த மட்டத்தில் இருப்பதால், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூலம் தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு (மொத்தச் சந்தையில் 30%, டீசல் 40%, 92 பெட்ரோல் 15%) ஆகும் வரிச் செலவு, நேரடியாக இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை விட மிகக் குறைவு. இந்த அனுகூலம் முழுமையாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கே கிடைக்கின்றது.
3. ஏகபோக உரிமைகள்:
விமான எரிபொருள் மற்றும் மின்சார சபை உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு உலை எண்ணெய் (Furnace Oil) வழங்கும் முழு ஏகபோக உரிமையும் கூட்டுத்தாபனத்திடமே உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பெருமளவு லாபத்தைப் பயன்படுத்தி சாதாரண டீசல் மற்றும் பெட்ரோலை குறைந்த விலையில் விற்கும் பலம் கூட்டுத்தாபனத்திற்கு உண்டு, ஆனால் தனியார் துறைக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
4. சேமிப்பு நிலையக் கட்டணம்:
எண்ணெய் சேமிப்பு முனைய நிறுவனத்தின் பெரும்பான்மை உரிமம் கூட்டுத்தாபனத்திடமே உள்ளது. இதனால் ஏனைய தனியார் நிறுவனங்கள் தமது எரிபொருளைச் சேமித்து விநியோகிக்க கூட்டுத்தாபனத்திற்கு பெருந்தொகையான கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.
5. இலாப வரம்பு (Profit Margin):
தனியார் நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி, அவர்களால் எரிபொருள் விற்பனை மூலம் அதிகபட்சமாக 4% சதவீத லாபத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். உலகச் சந்தையில் விலை உயரும்போதும் இறக்குமதிச் செலவு அதிகரிக்கும்போதும் நட்டத்துடன் எரிபொருளை விற்க எந்தத் தனியார் நிறுவனமும் தயாராக இருக்காது.
எதிர்கால ஆபத்துகள்:
• தனியார் நிரப்பு நிலையங்களில் விலை அதிகரிப்பு அல்லது விநியோகத் தடை காரணமாக அனைத்து நுகர்வோரும் கூட்டுத்தாபன நிலையங்களை நோக்கி நாடுவதால் மீண்டும் வரிசைகள் உருவாகலாம்.
• குறைந்த விலையில் பெறப்படும் எரிபொருளைக் கான்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் சேகரித்து கூடுதல் விலைக்கு விற்கும் கறுப்புச் சந்தை வியாபாரம் தலைதூக்கும்.
• 1970களில் இருந்த ‘எக்சொன் மொபில்’ (ExxonMobil) போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேறியது போல, தற்போதைய தனியார் நிறுவனங்களுடன் மோதலில் ஈடுபடுவது வெளிநாட்டு முதலீட்டாளர்களை விரட்டியடிக்கும்.
அட்வொகாட்டா நிறுவனத்தின் பரிந்துரைகள்:
• சுதந்திரமான ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை: பொதுப் பயன்பாடுகள் ஆணையம் போன்ற சுதந்திரமான ஒழுங்குபடுத்தலின் கீழ் பெட்ரோலியத் தொழில்துறையைக் கொண்டுவருதல்.
• சேமிப்பு முனையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களைப் பிரித்தல்: CPSTL முனைய வசதிகளையும் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தையும் கூட்டுத்தாபனத்தின் ஏகபோகத்திலிருந்து விடுவித்து, அனைத்து நிறுவனங்களும் நியாயமான முறையில் பயன்படுத்தக் கூடிய சுதந்திரமான நிறுவனங்களாக மாற்றுதல்.
• விலைச்சலுகைக்குப் பதிலாக நேரடி மானியம்: எரிபொருள் விலைக்கான பொதுவான மானியங்களை வழங்குவதற்குப் பதிலாக, உண்மையாகவே பாதிக்கப்படும் ஏழைமக்களை இலக்காகக் கொண்டு ‘அஸ்வெசும’ போன்ற முறைகள் மூலம் நேரடி நிதி உதவி வழங்குதல்.



