ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி நடத்தப்படும் போராட்டம் தொடர்பில் பிறப்பிக்கப் பட்டுள்ள நீதிமன்ற உத்தரவு விபரம்..
கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில், கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி நடத்தப்படும் போராட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குருந்தவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கருத்துக்களைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் உல்பனே சுமனங்கல தேரர், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்குப் பொருந்தும்.
விஹாரமஹாதேவி பூங்காவிலுள்ள புத்தர் சிலைக்கு அருகிலுள்ள வளாகம், நடைபாதைகள், எஃப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை, லிப்டன் சுற்றுவட்டம், சொய்சா சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, கண்ணங்கர மாவத்தை, கிரீன் பாத் மற்றும் மலல் வீதி (Flower Road) உள்ளிட்ட வீதிகளை மறித்து இடையூறு ஏற்படுத்துவதைத் தவிர்க்குமாறு இந்த நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலல் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாலும், விஹாரமஹாதேவி பூங்காவின் புத்தர் சிலைக்கு அருகிலுள்ள வளாகத்திலும் தொடர்ந்து தங்கியிருப்பதைத் தவிர்க்குமாறும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க வேண்டாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 106(1) பிரிவின் கீழ் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் 106(3) பிரிவின்படி இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற உத்தரவை மீறுவது, இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 185 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



