News

அமெரிக்கா – இஸ்ரேலுடன் இணைந்து இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விண்வெளி நிலையம் அமைக்கும் இரகசியத் திட்டம் குறித்த எச்சரிக்கை !!

இலங்கையின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ‘விண்வெளி நிலையம் (Spaceport) ஒன்றை அமைப்பதற்கு இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகள் திட்டமிட்டு வருவதாகவும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமெரிக்காவின் விண்வெளி பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு வருவதாகவும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அதன் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. வீரசிங்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கை இராணுவத்தை அமெரிக்கா தலைமையிலான சக்திகளின் இராணுவத்துடன் இணைக்கும் செயல்முறை நடைமுறையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ACSA ஒப்பந்தம், மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையினருடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் மத்திய கிழக்கு அமெரிக்க நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படை பங்களிப்பு வழங்குதல் போன்றவற்று ஊடாக இந்த நிலைமை உருவாக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

சமீபத்தில், அமெரிக்க இந்தோ-பசிபிக் விண்வெளிப் படையின் (USSPACEFOR-PAC) பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்து, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளைச் சந்தித்து விண்வெளி மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதற்கு இணையாக அமெரிக்காவின் ‘USS Canberra’ போர் கப்பலும் நாட்டிற்கு வருகை தந்திருந்ததாகவும், இதன் மூலம் இலங்கை அமெரிக்காவின் பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் ஆழமாக இணைக்கப்பட்டு வருவதாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டுகிறது.

குறிப்பாக, இஸ்ரேலின் உதவியுடன் கிழக்குக் கரையில் விண்வெளி மையம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கிடைக்கும் தகவல்களை மிகவும் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா மற்றும் லெபனானில் நடைபெற்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு இஸ்ரேலிய வீரர்களுக்காக கிழக்குக் கரையில் ஓய்வு மையங்கள் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றங்களை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் மற்றொரு படியாக இதனைக் சந்தேகிக்கலாம் என அக்கட்சி கூறுகிறது. இத்தகைய நடவடிக்கையானது சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற இலங்கைக்கு நட்பு நாடுகளுக்கும், மலாக்கா நீரிணை நோக்கிச் செல்லும் கடல் பாதைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

எனவே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் உள்ள இராணுவ ஒத்துழைப்பின் அளவு என்ன, விண்வெளி மைய முன்மொழிவின் உண்மைத் தன்மை என்ன, மற்றும் வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இலங்கை நிலம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது.

Recent Articles

Back to top button