News

முஸ்லிம் தாதிமார் விவகாரத்தில் மனித உரிமை மீறலுக்குப் பொறுப்பான டாக்டர் சுகுணனுக்கு பதவி உயர்வா?  ஜம்மியத்துல் உலமா கவுன்சில் கடும் கண்டனம்

முஸ்லிம் தாதிமார் விவகாரத்தில் மனித உரிமை மீறலுக்குப் பொறுப்பான டாக்டர் சுகுணனுக்கு பதவி உயர்வா?  ஜம்மியத்துல் உலமா கவுன்சில் கடும் கண்டனம்

✍🏻 நூருல் ஹுதா உமர்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியச் சென்ற முஸ்லிம் தாதியர்கள் தலையை மறைத்திருந்த காரணத்தினால், அவர்களைப் பணியைப் பொறுப்பேற்க அனுமதிக்காத சம்பவத்துடன் தொடர்புடைய பொறுப்பதிகாரியாகக் குறிப்பிடப்படும் டாக்டர் சுகுணன், மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கை ஜம்மியத்துல் உலமா கவுன்சில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை ஜம்மியத்துல் உலமா கவுன்சிலின் தலைவர் முபாறக் முப்தி கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது தீர்மானத்தை அறிவித்திருந்தது. இவ்வாறானதொரு நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சும், பொது நிர்வாக அமைச்சும் உரிய விசாரணைகளை மேற்கொள்ளாமை அரசாங்கத்திற்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் விடயமாகும்.

முஸ்லிம் தாதியர்கள் தொடர்பான இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக டாக்டர் சுகுணனே செயற்பட்டிருந்தார். அவர் விடுமுறையில் சென்றிருந்ததாகக் கூறப்பட்டாலும், இன்றைய நவீன நிர்வாகக் கட்டமைப்பில் அவருக்குத் தெரியாமல் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருக்க முடியுமா? அல்லது அவரது அறிவுடனேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? என்பது தொடர்பில் அமைச்சு ஏன் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை?

அதேபோன்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து பொதுச் சேவை ஆணைக்குழு அறிந்திருக்கவில்லையா? அல்லது குறித்த அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அனுமதி அளித்தபோது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் கவனத்தில் கொள்ளப்படவில்லையா?

இவ்வாறான முக்கியமான கேள்விகளுக்கு அரசாங்கம் உரிய பதிலளிக்க வேண்டும். மனித உரிமை மீறல் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஒரு சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு விசாரணைகள் இன்றி பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button