News

ஒரு அரசாங்கம் என்பது தற்காலிகமானது… அது நிரந்தரம் இல்லை அரசாங்கங்கள் மாறும்…  அதிகாரம் கைமாறும் என்பதை மறந்து விடாதீர்கள் என சஜித் எச்சரிக்கை

முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலத்தின் கீழ் வழங்கப்படும் விசேட அதிகாரங்கள், ஒரு காலத்தில் அவற்றை அறிமுகப்படுத்துபவர்களுக்கே எதிராக மாறக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளதுடன், அந்தச் சட்டமூலத்தை உடனடியாகத் திரும்புப் பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


“அரசாங்கங்கள் மாறும். அதிகாரம் கைமாறும். இன்று தாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்று நினைப்பவர்கள், ஒரு நாள் தாங்களே உருவாக்கிய அதிகாரங்களின் தயவில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்படலாம்” என பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கங்கள் நிரந்தரமாக ஆட்சியில் இருப்பதில்லை என்றும், அரசுக்கு அதிக அளவிலான அதிகாரங்களை வழங்கும் சட்டங்கள், இறுதியில் அவற்றை அறிமுகப்படுத்தியவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


“இத்தகைய அகந்தை எப்போதும் தண்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டங்களால் இல்லாவிட்டாலும், கர்மா எனும் விதியால் தண்டிக்கப்படும்” என அவர் கூறியுள்ளார்.


1979 ஆம் ஆண்டில் தற்காலிக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) சுட்டிக்காட்டிய பிரேமதாச, அது அரசுக்கு வழங்கிய விசேட அதிகாரங்களின் விளைவுகளைச் சந்திக்க இலங்கை  மக்கள் போராடி வருவதாகத் தெரிவித்தார். 


முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிறைவேற்று உத்தரவுகளின் கீழ் ஒரு வருடம் வரை தடுத்து வைப்பது, பொலிஸாரிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களை சாட்சியமாக ஏற்பது, மற்றும் நீதித்துறை முன் அனுமதி இன்றி தொலைபேசி பதிவுகள் மற்றும் இருப்பிடத் தரவுகளைப் பெறுவது உள்ளிட்ட பல சரத்துக்கள் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.


மேலும், ஒரு நபரின் தொடர்புகள், ஆடை, மொழி மற்றும் பச்சைக் குத்தல்கள் (Tattoos) கூட சந்தேகத்திற்கான காரணங்களாக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


சஜித் பிரேமதாசவின் கூற்றுப்படி, இத்தகைய சரத்துக்கள் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், ஊழல்களை புலனாய்வு செய்யும் ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சங்கவாதிகளை பாதிக்கக் கூடும்.
முன்மொழியப்பட்ட சட்டமூலம், குறிப்பாக ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர்கள் எழுப்பியுள்ள கவலைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்ட அதேவேளை, சாதாரண குடிமக்களின் அடிப்படை சுதந்திரங்களை பலிகொடுத்து அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்றும் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.


“ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் குற்றவாளிகளை எதிர்த்துப் போராடுவதற்கான விலையாக சாதாரண குடிமக்களின் சுதந்திரம் ஏன் இருக்க வேண்டும்?” என அவர் வினவியுள்ளார்.


“ஒரு அரசாங்கம் என்பது தற்காலிகமானது. ஒரு தேசத்தின் சுதந்திரம் தற்காலிகமானதாக இருக்கக்கூடாது” எனக் குறிப்பிட்ட பிரேமதாச, இந்தச் சட்டமூலத்தை திரும்பப் பெறுமாறு தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button