இலங்கையின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்பு ☂️🌧️

இலங்கையின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அதிகாலை வேளையில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் பனிமூட்டமான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



