நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் ஒரு ஆட்டுக்கு 5 இலட்சம் ரூபா என்றடிப்படையில் 2,000 செம்மறியாடுகளை இறக்குமதி செய்ய போகிறார்கள் ; ரோஹினி

ஒரு ஆட்டுக்கு 5 இலட்சம் ரூபா (500,000) என்றடிப்படையில் 2,000 செம்மறியாடுகளை இறக்குமதி செய்வதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒரு பில்லியன் ரூபா என்ற பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள பின்னணியில் இவ்வாறான பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை எவ்வாறான அடிப்படையில் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
இந்த நிதி ஒதுக்கீட்டின் பிரகாரம் ஒரு செம்மறியாட்டிற்காக அரசாங்கம் செலவிட எதிர்பார்க்கும் தொகை 5 இலட்சம் ரூபாவாகும்.
நாட்டின் எந்தவொரு பிரஜையும் இவ்வாறான ஒரு திட்டத்தின் அவசியம் தொடர்பில் குறிப்பிடாத சூழ்நிலையில் அசாதாரணமாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது அரசுக்கு ‘நெருங்கிய நண்பர்களை போஷிப்பதற்கான’ இரகசியத் திட்டத்திற்காகவா என அவர் சந்தேகம் வெளியிட்டார்.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது தற்போதைய சந்தையில் முட்டையொன்றின் விலை மீண்டும் 48 ரூபா வரை அதிகரித்துள்ளது.
எதிர்க்கட்சியில் இருந்தபோது இந்தியாவின் குஜராத்திலிருந்து ஹெட்டிபொல வரை குறைந்த விலைக்கு முட்டைகளைக் கொண்டு வருவது குறித்துப் பேசிய ஜனாதிபதி உள்ளிட்ட தற்போதைய ஆட்சியாளர்களிடம் இப்போது குஜராத் கோழிகள் இடும் முட்டைகளுக்கும் எமது நாட்டுக் கோழிகள் இடும் முட்டைகளுக்கும் இடையிலான விலை வித்தியாசம் என்னவென்று தாம் வினவுவதாகவும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
இன்று நாட்டில் மதிப்பிழந்து வரும் ரூபாவை விடவும் வேகமாக ஏதேனும் ஒன்று மதிப்பிழக்கின்றதென்றால் அது மக்களின் எதிர்பார்ப்புகளைச் சிதறடித்த தற்போதைய அரசாங்கத்தின் 159 பாராளுமன்ற உறுப்பினர்களாவர்



