News

முல்லைத்தீவில் 17 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட இந்துக் கோயில் குரு ஒருவருக்கு விதிக்கப்பட்ட 17 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை 13 ஆண்டுகளாகக் குறைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
.
2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நித்தியானந்தன் மோகன் ராஜ் என்ற குறித்த பிரதிவாதிக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
.
நீதிமன்ற ஆவணங்களின்படி, பாதிக்கப்பட்ட பெண் க.பொ.த உயர்தர வகுப்புகளில் கல்வி கற்று வந்த நிலையில், பிரதிவாதியின் வீட்டில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த மாணவியாவார்.
.
பிரதிவாதி தன்னிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், இது குறித்து வெளியே சொல்ல வேண்டாம் என மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் சாட்சியமளித்தார். பின்னர் அவர் இடம்பெயர்ந்தோர் முகாமுக்குத் திரும்பியுள்ளார்.
.
பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பதை சுகாதாரப் பணியாளர்கள் கண்டறிந்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட மரபணு (DNA) பரிசோதனையில், அக்குழந்தையின் தந்தை பிரதிவாதிதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
.
இந்தப் பாலியல் உறவு இருவரின் சம்மதத்தின் பேரில் ஏற்பட்டது என்ற பிரதிவாதியின் வாதத்தை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரது குற்றத்தை உறுதி செய்தது.
.
எனினும், பிரதிவாதி இதற்கு முன்னர் எந்தக் குற்றத்திலும் ஈடுபடாதவர் என்பதையும், ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதையும் கருத்தில் கொண்டு, அவரது சிறைத் தண்டனையை 17 ஆண்டுகளிலிருந்து 13 ஆண்டுகள் கடூழியச் சிறையாக நீதிமன்றம் குறைத்தது.
.
முன்னர் விதிக்கப்பட்ட 5,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டிய 300,000 ரூபாய் நஷ்டஈடும் மாற்றமின்றி அப்படியே தொடரும்.
.
நீதிபதி அமல் ரணராஜாவின் உடன்பாட்டுடன், நீதிபதி கலாநிதி சுமுது பிரேமச்சந்திர இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button