ரூபா 5 இலட்சத்துக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் அதிக வரி செலுத்த நேரிடலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை🚨

ரூ. 5 இலட்சத்துக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் அதிக வரி செலுத்த நேரிடலாம் – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை🚨
இலங்கை | நவம்பர் 23, 2026
ரூ. 500,000-க்கு மேற்பட்ட தொகைகளை பணமாக (Cash) பரிவர்த்தனை செய்வது, தற்போதுள்ள வரி விதிமுறைகளின் கீழ் அதிக வரிச் சுமைக்கு வழிவகுக்கலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) எச்சரித்துள்ளது.
குறிப்பாக காணி, சொத்து, வாகனங்கள் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களிலும், ரூ. 5 இலட்சத்துக்கு அதிகமான வணிகச் செலவுகளை அனுமதிக்கப்பட்ட பணம் செலுத்தும் முறைக்கு வெளியே பணமாகச் செலுத்துவதிலும் இந்த வரி விதிப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரூ. 500,000-க்கு அதிகமான வணிகச் செலவுகளை பணமாகச் செலுத்தினால், அந்தச் செலவுகள் வரிக்கழிவுக்கான செலவுகளாக ஏற்றுக்கொள்ளப்படாது. இதனால், வரிக்குட்பட்ட வருமானத்தை கணக்கிடும்போது அந்தத் தொகை மீண்டும் இலாபத்துடன் சேர்க்கப்படும் என அவர் விளக்கினார்.
உதாரணமாக, ஒரு நிறுவனம் ரூ. 10 இலட்சம் பெறுமதியான செலவை பணமாகச் செலுத்தினால், அந்தத் தொகை வரிக்கழிவாகக் கணக்கிடப்படாது. இதனால் நிறுவனத்தின் வரிக்குட்பட்ட இலாபம் ரூ. 10 இலட்சத்தால் அதிகரிக்கும். 30% நிறுவன வரி விகிதத்தின் கீழ், இதனால் மேலதிகமாக ரூ. 3 இலட்சம் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
காணி மற்றும் சொத்து விற்பனை தொடர்பான மூலதன ஆதாய வரிக் கணக்கீடுகளிலும் இதே கட்டுப்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவர் ரூ. 90 இலட்சத்திற்கு காணியொன்றைக் கொள்வனவு செய்து பின்னர் ரூ. 1 கோடிக்கு விற்பனை செய்தால், வழமையாக ரூ. 10 இலட்சம் இலாபமே வரிக்குட்பட்ட ஆதாயமாகக் கணக்கிடப்படும்.
ஆனால், அந்தக் காணியை ஆரம்பத்தில் உரிய விதிமுறைகளை மீறி பணமாகக் கொள்வனவு செய்திருந்தால், ரூ. 90 இலட்சம் கொள்வனவு செலவு வரிக் கணக்கீட்டில் ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம். அத்தகைய சூழலில், உண்மையான இலாபமான ரூ. 10 இலட்சத்திற்குப் பதிலாக, முழு விற்பனைத் தொகையான ரூ. 1 கோடியும் வரிக்குட்பட்ட ஆதாயமாகக் கணக்கிடப்படக்கூடும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
நிதிப் பரிவர்த்தனைகளை முறையான வங்கிக் கட்டமைப்புகள் ஊடாக மேற்கொள்வதை ஊக்குவித்தல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் வரி அமைப்புக்கு வெளியே நடைபெறும் நிதிச் செயற்பாடுகளை ஒழுங்குமுறை கட்டமைப்புக்குள் கொண்டுவருதல் ஆகிய நோக்கங்களுக்காகவே இக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.



