யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடும்பம் ஒன்றினால் நடத்தப்பட்டு வரும் “மாத்தறை அம்புல” உணவகத்தின் ஒரு பகுதி ஏன் இடிக்கப்பட்டது? பொலிஸார் விளக்கம்

யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடும்பம் ஒன்றினால் நடத்தப்பட்டு வரும் “மாத்தறை அம்புல” (Matara Ambula) உணவகத்தின் ஒரு பகுதி இடிக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
.
அனுமதியற்ற கட்டுமானத்தை அகற்றுமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை கட்டிட உரிமையாளர் தொடர்ந்தும் புறக்கணித்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவிற்கு அமையவே இந்த இடிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.
யாழ்ப்பாணம், பிரதான வீதி இலக்கம் 103 இல் அமைந்துள்ள வாடகைக் கட்டிடத்தில் சுமார் ஐந்து வருடங்களாக இந்த உணவகம் இயங்கி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அக்கட்டிடத்தின் ஒரு பகுதி பிரதான வீதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்தது.
.
குறித்த கட்டுமானத்தை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பத்தில் விடுத்த அறிவுறுத்தல்கள் கவனத்தில் கொள்ளப்படாததால், 2025 மே 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகர சபையில் இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டது.
.
அதனைத் தொடர்ந்து, மாநகர ஆணையாளரினால் கட்டிட உரிமையாளருக்கு இரண்டு அறிவித்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
.
இந்நிலையில், 2026 ஜூலை 9 ஆம் திகதி குறித்த அனுமதியற்ற கட்டுமானத்தை அகற்றுமாறு கட்டிட உரிமையாளருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், உரிமையாளர் அதனைச் செய்யத் தவறினால் மாநகர சபையினால் அதனை இடித்து அகற்றுவதற்கும் அனுமதி வழங்கியது.
.
அதன்பின்னர் வழங்கப்பட்ட மேலதிக அறிவித்தலைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நவம்பர் 25 ஆம் திகதி மாநகர சபை அதிகாரிகளால் அந்த அனுமதியற்ற பகுதி அகற்றப்பட்டது.
.
இந்த இடிப்பு நடவடிக்கை தொடர்பான உண்மைத் தகவல்களைத் திரிபுபடுத்தி, பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



