மூடப்பட்டிருந்த மரதகஹமுல விசேட மொத்த விற்பனை நிலையத்தின் அரிசி விற்பனையகங்கள் நாளை முதல் மீண்டும் திறப்பு
முறையான அரிசி விநியோகம் இன்மையால் மூடப்பட்ட மரதகஹமுல விசேட மொத்த விற்பனை நிலையத்தின் அரிசி விற்பனையகங்களை நாளை முதல் மீண்டும் திறப்பதற்கு அரிசி விற்பனையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவிய அரிசி பற்றாக்குறைக்கு தீர்வாக கடந்த 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 70 ஆயிரம் மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் தனியார் இறக்குமதியாளர்களுக்கும் கிடைத்தது.
குறித்த காலப்பகுதியில் தனியார் இறக்குமதியாளர்களினால் 67 ஆயிரம் மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதுடன், அரிசி கிலோ ஒன்றுக்கு 65 ரூபாய் வரி இலங்கை சுங்கத்தினால் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை மூலம் இலங்கை சுங்கத்திற்கு இறக்குமதி வரியாக 430 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி பற்றாக்குறைக்குத் தீர்வாக, அரசாங்கத்தின் தலையீட்டின் ஊடாக கடந்த 20 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இருப்பினும், அரிசி இறக்குமதிக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த கால அவகாசம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் வரை, அரிசியை விடுவிக்க முடியாது என இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 5200 மெற்றிக் டன் அரிசி தொகை எதிர்வரும் செவ்வாய்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது.
அரிசி இறக்குமதியின் மூலம் நாட்டில் நிலவும் அரிசி பற்றாக்குறை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யப்பட்டாலும், அரிசி பற்றாக்குறைக்கு முழுமையாக தீர்வு கிட்டவில்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.