சமூக நீதிக் கட்சி, தேசிய மக்கள் சக்தியிலிருந்து விலகும் தீர்மானம் ஏன்?
*சமூக நீதிக் கட்சி, தேசிய மக்கள் சக்தியிலிருந்து விலகும் தீர்மானம் ஏன்?*
இலங்கையின் தேசிய அரசியலிலும் முஸ்லிம் சமூகத்தின் அரசியலிலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டுமென நாம் 2012 ஆம் ஆண்டிலிருந்து தொடர் தேர்ச்சியாக செயல்பட்டு வரும் ஒரு
முற்போக்கான அரசியல் குழுவாகும்.
அந்த வகையில் மாற்று அரசியலுக்காக செயல்படும் முற்போக்கு சக்திகளுடன் நாம் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அந்த வகையில் மக்கள் விடுதலை முன்னணியுடனும் நாம்
2012/2013 இலிருந்து நல்லுறவைப் பேணி வருவதுடன் அரசியல் ரீதியான செயல்பாடுகளிலும் பல
சந்தர்ப்பங்களில் இணைந்து செயல்பட்டுள்ளோம்.
அந்தப் பின்னணியில் 2018/19 காலப்பகுதிகளில் மாற்று அரசியலுக்கான மூன்றாவது சக்தி ஒன்றை
உருவாக்கும் செயல் திட்டங்கள் பல்வேறு அரசியல் சமூக அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறான பல்வேறு அமைப்புகளுடனும் நாம் நெருங்கி செயல்பட்டுள்ளதுடன் அதனை உருவாக்குவதற்கான காத்திரமான பங்களிப்புகளையும் நாம் வழங்கி வந்தோம். 2019 ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் உருவாக்கத்தில் நாம் முக்கிய பங்காளர்களாக நாம் செயற்பட்டோம். 2019
ஜனாதிபதி தேர்தலில் தோழர் அனுரகுமார திசாநாயக்க அவர்களின் வெற்றிக்காக நாம் முன்னின்று
உழைத்தோம்.
எனினும் 2020 பாராளுமன்றத் தேர்தலின் போது நாம் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியின் தீர்மானத்தின்
படி தேசிய மக்கள் சக்தியிலிருந்து நாம் வெளியேறியமை ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வாக
அமைந்துவிட்டது.
எனினும் அந்தத் த தீர்மானத்தை நாம் மீள் பரிசீலனை செய்து 2021 டிசம்பர் 20ஆம் திகதி நடைபெற்ற
தேசிய மக்கள் சக்தியின் பேராளர் மாநாட்டில் நாம் உத்தியோகபூர்வமாக கலந்து கொண்டோம்.
அன்றிலிருந்து நாம் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து மாவட்ட மற்றும் உள்ளூர் மட்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தோம்.
இந்நிலையில் 2022 பிப்ரவரி நான்காம் திகதி நாம் சமூக நீதிக் கட்சி என்ற பெயரில் எமது
கட்சியை ஸ்தாபித்தோம்.
2023 மே 13ஆம் திகதி எமது கட்சியின் முதலாவது பேராளர் மாநாடு நடைபெற்றது. அதில் தேசிய
மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுரா குமார மற்றும் பொதுச் செயலாளர் வைத்தியக் கலாநிதி நிஹால் அபேசிங்ஹ ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து நாம் ஏற்பாடு செய்த பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகள் மற்றும்
கலந்துரையாடல்களில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர்கள் பேச்சாளர்களாகவும்
வளவாளர்களாகவும் கலந்து கொண்டனர்.
2024 மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பல இடங்களில் எமது கட்சி
சார்பாக வேட்பாளர்களையும் நாம் களம் இறக்கி இருந்தோம்.
இவ்வாறு நாம் மிகவும் நெருக்கமாக அவர்களுடன் செயல்பட்டாலும் எம்மை ஒரு கூட்டணியின்
பங்காளிகளாக இணைத்துக் கொள்வதற்கு தயக்கம் காட்டி வந்தனர்.
இது தேசிய மக்கள் சக்தியுடனான தொடர் தேர்ச்சியான சுமுகமான பயணத்திற்கு எமக்கு
ஒரு இடைஞ்சலாக இருப்பதாகவே நாம் கருதுகின்றோம்.
எனவே இந்த விடயத்தையும் அதனால் களத்தில் ஏற்படும் கருத்து, கொள்கை ரீதியான முரண்பாடுகள்,
நிர்வாக ரீதியான முரண்பாடுகள், நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது வாக்காளர்கள், ஆதரவாளர்கள்
சார்பான சமூக அரசியல் விவகாரங்கள் குறித்த விடயங்களை கலந்துரையாடி தீர்வுகளை
எட்டுவதற்கான எந்த ஒரு உத்தியோகபூர்வமான ஏற்பாடும் தேசிய மக்கள் சக்தியிடம் இருக்கவில்லை.
இந்த விடயத்தினை தேசிய மக்கள் சக்தியின் வழிநடத்தும் குழுவுக்கு நாம் பலமுறை
வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் தெரியப்படுத்தியும் அதற்குப் பொருத்தமான முறையில் எந்த
ஒரு சாதகமான பதிலும் அவர்கள் தரவும் இல்லை. அதற்கான ஏற்பாடுகள் எதனையும்
மேற்கொள்ளவும் இல்லை.
சுமார் கடந்த நான்கு வருடங்களாக நாம் இவ்வளவு நெருக்கமாக அவர்களுடன் இணைந்து
செயல்பட்டும் இந்த அடிப்படையான நிர்வாக ரீதியான ஒரு கோரிக்கையை கூட அவர்களால் செய்து
தர முடியாமல் போனமை எமக்கு பெரும் ஏமாற்றத்தையும் அவர்கள் மீதான அவநம்பிக்கையும்
ஏற்படுத்திவிட்டது.
இவ்வாறான பின்னணியிலேயே நாம் உத்தியோகபூர்வமாக தேசிய மக்கள் சக்தி இருந்து விலகி
சுயாதீனமாக செயல்பட வேண்டும் என்ற இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளோம்.
சட்டத்தரணி றுடானி ஸாஹிர்,
பொதுச் செயலாளர்,
சமூக நீதிக் கட்சி.
25.07.2024