கடந்த அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங் களை இந்த அரசு தமது வேலைத்திட்டங்களாக உரிமை கொண்டாடுகிறது – இது அடுத்தவன் பிள்ளைக்கு தன் பெயரை போட்டுக்கொள்வது போன்ற செயலாகும்
நாட்டில் கடந்த அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங் களை தமது வேலைத்திட்டங்களாக புதுப்பித்து அதில் உரிமை கொண்டாடுவது, மற்றையவர்களின் குழந்தைகளுக்கு போலி பிறப்புச் சான்றிதழை தயாரிப்பது போன்ற விடயமாகும். மக்களை ஏமாற்றாமல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் அவர்களுக்கென தனித்துவமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முயற்சிக்க வேண்டும்”என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
திருகோணமலை எண்ணெய்க் குத தொகுதியிலுள்ள 99 எண்ணெய்க் குதங்களையும் தேசிய எரிபொருள் களஞ்சிய அவசியத்தையும் விட கொள்ளளவு அதிகமென்று குறிப்பிட்டு, அதனால் 24 எண்ணெய்க் குதங்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கவும் தற்போது எல்.ஐ.ஓ.சி. நிறுவனம் பயன்படுத்தும் 14 எண்ணெய்க் குதங்களை அந்த நிறுவனத்துக்கு வழங்கவும் மீதமுள்ள 61 எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் இலங்கை ஒன்றிணைந்த வேலைத்திட்டமாக அபிவிருத்தி செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் நேற்று முன்தினம் கட்டுகுருந்த பிரதேசத்தில் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இந்த விடயத்தில் புதிதாக செய்வதற்கு ஜனாதிபதிக்கு எதுவும் இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் அதனை நாங்கள் செய்து நிறைவு செய்துவிட்டோம். நான் 2020ஆம் ஆண்டு எரிசக்தி அமைச்சை பொறுப்பேற்றுக்கொண்டபோது இந்த 99 எண்ணெய் குதங்களும் 2002ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தன.
எல்.ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் களஞ்சியத்துக்காக பயன்படுத்தும் 14 எண்ணெய்க் குதங்களும் பிரீமா நிறுவனம் நீர் களஞ்சியத்துக்காக பயன்படுத்தும் இரு குதங்கள் தவிர ஏனைய 83 குதங்களும் இரண்டாம் உலகப் போர் காலப்பகுதியிலிருந்து 75 வருடங்களாக துருப்பிடித்தே இருந்தன.
எல்.ஐ.ஓ.சி. நிறுவனம் பயன்படுத்திய 14 குதங்களை அவ்வாறே அவர்களுக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள சகல குதங்களையும் மீண்டும் நாட்டுக்கு பொறுப்பேற்றுக்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுத்திருந்தோம். 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 06 ஆம் திகதியே இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தோம். எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 24 குதங்களில் ஐந்து தாங்கிகளை புனரமைப்பதற்கான பணிகளை ஆரம்பித்திருந்தோம்
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீதமிருந்த 65 தாங்கிகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து கப்பல் போக்குவரத்துக்கு அவசியமான கப்பலுக்கான எரிபொருளை களஞ்சியப்படுத்தவும் சர்வதேச எரிபொருள் சந்தைக்கு அவசியமான எரிபொருளை களஞ்சியப்படுத்துவதற்கான அவசியத்துக்கேற்ப அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பெரும் பகுதியையும் எல்.ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு மிகுதி 49 வீதம் கிடைக்கும் வகையிலும் திருமலை எரிபொருள் முனையம் என்ற பெயரில் வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் நாங்கள் நிறைவு செய்த வேலைத்திட்டத்தையே ஜனாதிபதி நேற்று முன்தினம் புதிய வேலைத்திட்டமாக அறிவித்திருந்தார்.
பொய் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், பொய்யாக ஆட்சியை முன்னெடுக்வே முயற்சிக்கிறது. காஞ்சனவினால் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை தமதாக்கிக் கொள்ள அரசாங்கம் முயற்சிப்பது மாத்திரமல்லாமல் ஜனக்க வக்கும்புரவினால் இலாபமடையச் செய்த ஹிங்குராணை சீனி தொழிற்சாலையை தமதாக்கிக் கொள்ளவும் அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அப்படியானதொரு முயற்சியையே திருமலை எண்ணெய்த் தாங்கிகள் விவகாரத்திலும் ஜனாதிபதி செய்து வருகிறார். அதனூடாக மக்களை ஏமாற்றவும் முயற்சிக்கிறார்.
மற்றையவர்களின் குழந்தைகளுக்கு போலி பிறப்புச் சான்றிதழை தயாரிப்பதற்கு பதிலாக தனக்கென குழந்தையொன்றை வளர்ப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிக்கவேண்டும். அதாவது, எங்களின் வேலைத்திட்டங்களை மெருகூட்டுவதை விடுத்து அவர்களுக்கென தனித்துவமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
2002ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பொறுப்பளிக்கப்பட்டு 75 வருடங்களுக்கு மேல் துருப்பிடித்துக்கொண்டிருந்த இந்த எண்ணெய்த் தாங்கிகளை இலங்கைக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் போராடிக்கொண்டிருந்தபோது அதற்கெதிராக தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் எனக்கு பெரும் சவாலாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.