இப்படியே போனால் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை விட மிக மோசமான நிலையில் தான் இந்த அரசாங்கம் வீடு செல்லும் .

சாணக்கியன் MP யின் நேற்றைய தின பாராளுமன்ற வரவு செலவு திட்ட உரையின் போது.
2025 வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படும் போது சாதாரணமாக அன்றி அது குறித்து அதிகம் ஆய்வு செய்ய வேண்டி இருக்கும் என எதிர்பார்த்தோம். சாதாரண வரவு செலவு திட்டமாக அன்றி அதிக விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்த்தோம். ஏனெனில், தேசிய மக்கள் சக்தி வேறுபட்ட் கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சி என்ற ரீதியிலேயே அந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் வழமைப்போன்ற வரவு செலவு திட்டமொன்றை ஆய்வு செய்வது போன்றே இதுவும் காணப்பட்டது. அதிலிருந்த இலக்கங்கள் மற்றும் எண்ணிக்கைகள் மாத்திரமே ஆய்வு செய்யப்பட வேண்டி இருந்தது. கொள்கை ரீதியாக பாரியளவில் எந்தவொரு மாற்றமும் இல்லை. எனவே வரவு செலவு திட்ட உரையிலும் எதையும் அதிகம் தேடிப் பார்க்கும் வகையில் எதுவும் இருக்கவில்லை.
ஆனால்இந்த வரவு செலவு திட்டத்தில் அவதானித்த சில விடயங்களை குறிப்பிட வேண்டும். இதில் வருவாயை நோக்கினால் 4.9 ட்ரில்லியன் காணப்படுகிறது. செலவீனங்கள் 7.2 ட்ரில்லியன் காணப்படுகிறது. அவ்வாறாயின் 2.2 ட்ரில்லியன் வரவு செலவு பற்றாக்குறை ஒன்று காணப்படுகிறது. சாதாரணமாக இவ்வாறானதொரு பற்றாக்குறை காணப்படும் போது திரைசேறி பத்திரங்களை கடனாக பெற்று இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தான் அரசாங்கத்தின் கொள்கையாக காணப்படுகிறதா இல்லையா என்று தெரியவில்லை. நிதி தொடர்பான அமைச்சர்கள் எவரும் இவ்விடத்தில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. எவரும் இல்லை.
வரவு செலவு திட்ட பற்றாக்குறையினால் நிலவுவது மூலதன செலவீனங்கள் அதாவது, வீதிகள் அமைப்பதாக கூறுகின்றனர், ரயில் தண்டவாளங்கள், பாலம், வைத்தியசாலை போன்றன அமைப்பது மூலதன செலவு. இந்த மூலதன செலவுகளை தான் சாதாரணமாக குறைவாக மேற்கொள்வர். வரவு செலவு திட்ட வாசிப்பின் போது, இவ்வளவு தூரத்திற்கு வீதிகள், இத்தனை வைத்தியசாலைகள் அமைக்கப்பட உள்ளன என மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் வரலாற்றை நோக்கும் போது இந்த அரசாங்கம் கூறலாம், நாம் ஏனைய அரசாங்கங்களை வேறுபட்டவர்கள் என்று. ஆனால் 2015 முதல் 2024 வரையான சகல வரவு செலவு திட்டங்களையும் எடுத்துக் கொண்டால் மூலதன செலவில் 58 சதவீதமே செலவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை எடுத்துக் கொண்டால் 1260 பில்லியன் செலவு செய்வதாக கூறப்பட்ட போதிலும் 791 மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. வரவு செலவு திட்ட வாசிப்பை தொடர்ந்து பல அபவிருத்திகள் இடம்பெறவுள்ளன என மகிழ்ச்சியில் உள்ள மக்களுக்கு வருட இறுதியில் அது நடைபெறவில்லை என்ற ஏமாற்றமே மிஞ்சும்.
இந்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக பாரிய அபிவிருத்திகளை முன்னெடுப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால் அவர்கள் கூறும் அளவிலான தொகையை ஒதுக்குவதாக கூறுகின்ற போதிலும் வருட இறுதியாகும் போது தெரியவரும் இவர்கள் கூறும் எந்த தொகையையும் அவர்களால் முழுமையாக ஒதுக்க முடியாது என்று. அதற்கு பல காரணங்கள் உண்டு. உதாரணமாக கூறினால், வட மாகாண வீதி அபிவிருத்திக்கு 5 பில்லியனோ ஏதோவொரு தொகை ஒதுக்கி இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் வருட இறுதியில் பொதுவாக கடந்த காலத்திலும் இந்த நிதி ஒதுக்கப்படவில்லை.
அதனை தொடர்ந்து முல்லைத்தீவில் ஒரு பாலம். அதன் பெறுமதி ஒரு பில்லியன் ரூபாய். அதனை தொடர்ந்து யாழ். பல்கலைக்கழகத்திற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேசிய மக்கள் கட்சிக்கு வட மாகாண மக்கள் வாக்களித்ததை பார்த்தால் 5ஆயிரம் பில்லியன் என எக்கச்சக்கமான காசு வட மாகாணத்திற்கு ஒதுக்கப்படும் என்று நினைத்தேன். ஆனால் மொத்த வரவுசெலவு திட்ட செலவுகளில் அதாவது 7200 பில்லியனில் 6 பில்லியன் மாத்திரமே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்றிலே பெரிய மாற்றம். தென்னிலங்கை கட்சிக்கு இத்தனை ஆயிரம் மக்கள் வாக்களித்துள்ளனர். அதற்கு இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது அவ்வளவுதான்.
ஒதுக்கீடுகள் அனைத்தும் வரவு செலவு திட்டத்தில் காணப்படும். ஆனால் நடைமுறையில் வராது. நல்லாட்சி காலத்தில் கம்பெரலிய திட்டத்தின் ஊடாக எத்தனையோ கோடிக் கணக்கான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த 5-6 பில்லியன் காசை ஒதுக்கி இந்த வடக்கு மக்களை நீங்கள் தொடர்ச்சியாக ஏமாற்ற முடியும் என்று மட்டும் நினைக்காதீர்கள். வடக்கில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. வடமாகா காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த போராட்டம் உலகத்திலே மிக நீண்ட கால போராட்டமாக காணப்படுகிறது. 2900 நாட்களையும் தாண்டி இன்றுவரை நடைபெறுகிறது. அந்த விடயத்திற்கு தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்தினால் ஒரு முன்மொழிவு கூட முன்வைக்க முடியாதுள்ளது.
அடுத்ததாக எமது அரசியல் கைதிகள். எமது நாட்டிலே அரசியல் கைதிகள் என்று எவருமே இல்லை என்று நீதி அமைச்சர் கூறுகிறார். பட்டியலை தருமாறு என்னிடம் கேட்கிறார். நான் நீதிஅமைச்சரா அவர் நீதி அமைச்சரா? அடுத்ததாக எமது பிரதேசத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும். கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் பதிலை எதிர்பார்க்கின்றனர். அபிவிருத்திகள் போன்ற விடயங்களால் மாத்திரம் மக்களை கவரலாம் என்று நீங்கள் நினைக்காதீர்கள். அப்படி பார்த்தால் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எத்தனையோ கோடி கணக்கான அபிவிருத்திகளை மேற்கொண்டார். மக்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பளித்துள்ளனர். இதனை ஒரு நிரந்தரமான ஆதரவாக நீங்கள் நினைத்துவிடாதீர்கள். அதேபோன்று கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கீடுகள் இல்லை என்று எமது மக்கள் நினைக்கமாட்டார்கள். எங்களுக்கு ஒரு அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு ஊடாக நாங்களே எங்களை ஆளக்கூடிய வகையில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதன் ஊடாக மாத்திரமே எங்களுடைய மக்களுடைய பிரச்சினையை முழுமையாக தீர்க்க முடியும். மாகாண சபை தேர்தலை கூட உடனடியாக நடத்துங்கள். உள்ளூரட்சி மன்ற தேர்தலை நடத்தும் அதே வேகத்துடன் அதனையும் நடத்துங்கள். ஏன் அதனை பின்னடிக்கின்றீர்கள்? நாட்டினுடைய ஜனாதிபதி புதிய அரசியலமைப்பில் ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம். பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய பின்னரே அதனை செய்யலாம் என்று கூறுகிறார்கள். அதனை ஒத்திவைத்தால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதை மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்.
கடந்த அரசாங்க காலப்பகுதிகளில் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வரி நிவாரணங்கள் வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட வரி நிவாரணங்களை இந்த அரசாங்கம் இரத்து செய்திருந்தால் 966 பில்லியன் மேலதிக வருவாயை அரசாங்கம் ஈட்டி இருக்கலாம். ஆனால் இந்த தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்திலும் இந்த வரி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. நான் இது குறித்து கூறும்போது, நாம் அவ்வாறு சண்டித்தனம் செய்யமாட்டோம் என கூறுகிறார். சண்டித்தனம் இல்லை உள்ள அதிகாரத்தை பயன்படுத்துங்கள்.
அடுத்ததாக, வரியை அதிகரிக்காது இருப்பதற்காக இந்த சிகரெட் கம்பனிகளால் அரசாங்கங்களுக்கு பாரிய தொகை பணம் வழங்கப்படுகிறது. அவ்வாறாயின் இந்த அரசாங்கத்திற்கும் சிகரெட் கம்பனிகளால் பணம் வழங்கப்பட்டுள்ளதா என எனக்கு கேட்க வேண்டியுள்ளது. கடந்த 2020 முதல் 2025 வரையான காலப்பகுதியில் இலங்கையிலுள்ள சகல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 100 அல்லது 90 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கான வரியும் 90 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. ஆனால் சிகரெட்டின் விலை 100 சதவீதத்தினால் அதிகரித்துள்ள போதிலும் அதற்கான வரி 66 சதவீதமே அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் என்ன? சுகாதார அமைச்சர் இலஞ்சம் பெற்றார், அரசாங்கத்தில் உள்ளவர்கள் இலஞ்சம் பெற்றனர் அதனால் அதிகரிக்கவில்லை என பல காரணங்கள் கடந்த காலத்தில் கூறப்பட்டன. அவ்வாறாயின் இன்றும் அதே காரணமா கூறப்படவுள்ளது?
தொடர்ந்து எரிபொருள் விலைகளை எடுத்துக் கொண்டால், தாம் ஆட்சிக்கு வந்தவுடன் எரிபொருளுக்கான வரிகள் அனைத்தையும் அகற்றுவோம் என தேர்தலின் போது குறிப்பிட்டனர். ஆனால் அதனை செய்யவில்லை. ஆனால் இந்த வருடம் குறைப்பதாக அமைச்சர் பேச்சாளர் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். அது சிறந்த விடயம். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். ஆனால் 2024 இல் எரிபொருள் வரியில் 200 பில்லியன் வரை வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 230 பில்லியன் வந்துள்ளது. இதில் முக்கியமான காரணம் ஐ.எம்.எ.ப் ஒப்பந்தத்தின் கீழ் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1 சதவீதம் எமது வருமான இலக்கு காணப்பட வேண்டும். இந்த வருட வரவு செலவு திட்டத்தில் சரியாக 15.1 சதவீதம்தான் காணப்படுகிறது. அவ்வாறாயின், அமைச்சரவை பேச்சாளர் கூறும் வகையில் இந்த எரிபொருள் வரியை குறைத்தால் அரசாங்கத்தின் வருவான இலக்கு குறையும். மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதை தான் நாமும் விரும்புகிறோம். ஆனால் இதில் செய்ய முடியாதவை அல்லவா குறிப்பிடப்பட்டுள்ளன.
சந்தை செயற்பாடுகளுக்கு அமைய வாகனங்களுக்கு வரிகள் குறைக்கப்படும் என பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு குறைவடைந்தால் அது நல்ல விடயம். ஆனால் இவை குறைவடைந்தால் வரவு செலவு திட்டத்திலுள்ள வருமான இலக்குகளை இழக்க நேரிடுமே. அவ்வாறாயின் எது பொய்? கடந்த காலத்தில் 5 வருடங்கள் பழைய வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி இருந்ததாகவும் அது தற்போது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதி சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண மக்களுக்கு காரொன்றை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஜாஜ் முச்சக்கர வண்டியொன்று 19 இலட்சம் ரூபாய். நெல்லை நல்ல விலைக்கு விற்கு அந்த பணத்தில் அகுவா கார் ஒன்றை கொள்வனவு செய்து குறைந்த விலைக்கு பெட்ரோல் அடித்து கடைக்கு செல்ல இருந்த மக்களின் வயிற்றில் தான் இந்த அரசாங்கம் அடித்துள்ளது.
கடந்த காலங்களிலும் நான் அவதானித்து இருக்கின்றேன், பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த போது அவர் எதையாவது குறிப்பிட்டுவிட்டு சென்றால் கிளிகள் போன்று அவரது பின்னாலுள்ள உறுப்பினர்களும் அதனையே கூறுவர். அந்நிய செலாவணி இருப்பு 6.1 பில்லியன் காணப்படுதாக அண்மையில் ஜனாதிபதி அவர்கள் கூறுகிறார். அது பொய். அதில் 4.1 பில்லியன் மாத்திரமே எமக்கு பாவிக்க முடியும். சுபோதினி ஆணைக்குழுவில் குறிப்பிட்ட மூன்றில் இரண்டை தருமாறு ஆசிரியர்கள் கோருகின்றர். ஆசிரியர்களும் மிகுந்த அதிருப்தியிலேயே உள்ளனர். எமது தமிழ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம் வழங்குவதாக குறிப்பிட்டனர். அனைத்து அரசாங்கத்திலும் கூறுகின்றனர். ஆனால் கம்பனிகள் அதிகரிப்பதில்லை. அவ்வாறாயின் வரவு செலவு திட்டத்தில் அவர்களுக்கு 200 ரூபாய் ஒதுக்குங்கள். இது தொடர்பில் விரிவாக பேசுவோம்.
வரவு செலவுதிட்ட உரையில் குறிப்பிடப்பட்டிருந்த மற்றுமொரு விடயம். பால் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதற்கு 2500 மில்லியன் ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் ஒன்றும் ஒதுக்க தேவையில்லை. மேய்ச்சல் தரையை வர்த்தமானி மூலம் அறிவியுங்கள். பால் உற்பத்திக்கு 2500 மில்லியன் தேவை இல்லை. பால் கரக்கும் மாட்டை கொலை செய்யும் நிலையில் தான் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மேய்ச்சல் தரை இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அதற்கு மேலதிகமாக பிம்சவிய திட்டத்தின் கீழ் காணிகளுக்கு ஒப்பம் வழங்கப் போகின்றாராம். வன நிலங்கள் 83ஆம் ஆண்டு வரைப்படத்திற்கு அமைவாக எல்லைப்படுத்தி ஒரு அறிக்கை தயார் நிலையில் இருக்கிறது. அந்த அறிக்கையை நீங்கள் அமுல்படுத்தினாலே இந்த வடக்கு கிழக்கில் இருக்கின்ற மக்கள் தமது சொந்த காணிகளுக்குள் போகலாம். இந்த பிம்சவிய தேவையில்லை. அடையாளப்படுத்தப்பட்ட இராணுவ முகாம்களை அகற்றுவதை பற்றி கதை;து 5-6 மாதங்கள் ஆகிவிட்டது. ஜனாதிபதியாக வந்தவுடன் 5-6 ஏக்கர் காணிகளை விடுவித்தார் அவ்வளவுதான். அதேபோலதான் வடக்கு கிழக்கில் எமது மக்களுடைய நிலங்கள். தொல்பொருள்காரன் ஒருபுறம் நிலங்களை பறித்துக் கொண்டு இருக்கிறான். அது இந்த அரசாங்கத்திலும் இடம்பெற்று வருகிறது. திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை எல்லாம் நிறுத்தாது நீங்கள் நல்லிணக்கத்தை பற்றி பேசக் கூடாது. இன்று உங்களுக்கு வடக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களது முடிவு தவறானது என அவர்கள் தங்களது முடிவை மாற்றி அமைப்பார்கள்.
ஏனெனில் இந்த வரவு செலவு திட்ட உள்ளடக்கத்தை பார்த்தால் இதில் 5 பில்லியன் வீதி அபிவிருத்தி ஒதுக்குவதாக குறிப்பிட்டால் இதைவிட பெருமளவிலான அபிவிருத்திகள் கடந்த அரசாங்கங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. துறைமகங்கள் கட்டப்பட்டுள்ளன. பாரிய அபிவிருத்திகள் செய்திருக்கிறார்கள். ஆனால் அடிப்படை பிரச்சினையான தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் இந்த மக்கள் உங்களுடைய ஜனாதிபதி அவருடைய ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்திலே ஒரு புதிய அரசியலமைப்பு என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார். எமது மக்கள் அதனை நம்பி வாக்களித்து இருக்கலாம். இன்று சமத்துவம் என்று கூறி அதனை மூடி மறைக்க முடியாது. எமது மக்களுடைய அடிப்படை பிரச்சினை, நாங்களே எங்களை ஆளக் கூடிய வகையான ஒரு கட்டமைப்பு எங்களுக்கு அவசியம். கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த இரண்டு விடயங்களிலும் எமது மக்கள் பின்வாங்கப் போவதில்லை. வடக்கு கிழக்கு மக்களுக்கு சோறும் தண்ணீரும் தான் முக்கியம் என்று கூறியிருந்த அமைச்சர்கள், இம்முறை பாராளுமன்றத்தை பார்க்க முடியாத அளவிற்கு தோல்வியடைந்துள்ளனர்.
இந்த நாட்டிலே நீங்கள் எவ்வளவு காலத்திற்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை தள்ளிப்போடுகின்றீர்களோ அதுவரை இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வடக்கு கிழக்கில் ஒரு விசேட நிதியை உருவாக்குவதற்கும் நாம் தயாராக இருக்கிறோம். எங்களுடன் இணைந்து இயங்குகின்ற நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நாட்டிலே ஒரு அரசியலமைப்பை கொண்டு வராமல் காலத்தை கடத்திக் கொண்டு இருந்து இன்னொரு தேர்தலுக்கு போகலாம் என்று நினைத்தால் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை விட மிக மோசமான நிலையில் தான் நீங்கள் வீடு செல்வீர்கள் என்பதை மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள். வீடியோ லிங்க் – https://we.tl/t-FLTuVvIITC

