புனித ஹரம் ஷரீஃபுகள், ஆடம்பர சுற்றுலா மையங்களாக ஆகி விடக்கூடாது.

வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகள் கடமைகள் நிறைவேறிய பின், உடல் உள ஆரோக்கியம் மற்றும் பயணத்திற்கு தேவையான நிதி மற்றும் போக்கு வரத்து வசதிகள் இருந்தால் ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
அவ்வாறு வசதி வாய்ப்புகள் உள்ளவர்களும், தொழிலிற்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ புனித தலங்களை கடந்து செல்பவர்கள் உம்ரா செய்வதும் விரும்பத் தக்கது.
மேற்படி இரண்டு தரப்பினர்களிலும் இலட்சாதிபதிகள் இருக்கலாம் இல்லாதும் இருக்கலாம்.
அல்லாஹ்வின் முன்னிலையில் ஏழை பணக்காரன், அரச குடும்பம், சாதாரண பிரஜை எத்தகைய வேறுபாடுகளும் கிடையாது, தொழில் தராதரங்களும் இல்லை.
ஆனால், துரதிட்ட வசமாக மக்கா மதீனா இரண்டு புனித ஸ்தலங்களையும் சூழ ஆயிராதிபதிகள், இலட்சாதிபதிகள் தாண்டி அரச குடும்பங்கள், கோடீஸ்வரர்களுக்கே ஆடம்பரமான ஹோட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு நாளைக்கு பல்லாயிரக் கணக்கான ரூபாய்களில் ஆடம்பர அறைகள் தான் ஹரம் ஷரீபுகளை சூழ உள்ளன, உலகில் உள்ள பிரபலமான ஐந்து ஏழு நட்சத்திர ஹோட்டல்களை விஞ்சிய ஹோட்டல்கள், வர்த்தக மையங்கள் அங்கு இருப்பதால் பிரசித்தமான அதிக செலவுகளுடன் கூடிய ஆடம்பர சுற்றுலா தளங்கள் போல் அவை காணப்படுகின்றன.
மூன்றாம் உலக நாடுகளில் ஹஜ் கடமையாகி செல்பவர்கள் ஹரம் ஷரீபுகளை விட்டு மிகவும் தள்ளியே தங்கி இருக்க வேண்டிய நிலை, அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியுமான உணவகங்களும் அருகில் இல்லாமை குறிப்பிடத்தக்கது.
அதே போன்று ஆயுலில் ஒரு முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற அல்லது உம்ரா யாத்திரை வர இருப்பவர்களுக்கு விடுமுறைகளில் சுற்றுலா வரும் பக்கா கோடிஸ்வரர்கள் மற்றும் உள்நாட்டு அண்டைநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை பெரும் இடைஞ்சலாகவே தெரிகிறது.
உதாரணமாக இலங்கையில் இருந்து ஹஜ் செய்வதற்கு 25 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை செல்கிறது, காரணம் எமது நாட்டு வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியிற்கு அப்பால் ஹரம் ஷரீபுகளுக்கு அருகில் இடிக்கப்பட்டு அமைக்கப்பட்ட ஆடம்பர ஹோட்டல்களும் தான்.
உண்மையில் இத்தகைய வானை முட்டும் ஐந்து ஏழு நட்சத்திர ஹோட்டல்கள் வர்த்தகத் தொகுதிகளை ஹரத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி அமைத்து ஏனைய நடுத்தர பயணிகளுக்கு கட்டுப்பாட்டு விலையில் ஒரே தரத்தில் ஈடு கொடுக்க முடியுமான தங்குமிடங்களை அமைத்து சமத்துவம் பேணுவதே இஸ்லாமிய வழிமுறைகளுக்கு ஏற்புடையதாக இருக்கும்.
இந்த விடயத்தை ஸவூதி அரசு கவனத்தில் கொண்டு அருகில் உள்ள ஐந்து ஏழு நட்சத்திரங்களை நடுத்தர தங்குமிடங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அண்மைக்காலமாக மக்கமா நகர் ஹரம் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம் பெறுவதால் நெரிசல் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகிறது, உள்ளே நுழைவதற்கும் நகர்வதற்கும் வெளியேறுவதற்கும் பலநூறு மீட்டர்கள் நடக்க வேண்டி இருக்கின்றது.
இயன்றவரை யாத்திரிகை பிரதேசங்களுக்குள் உள்நாட்டு அண்டை நாடுகளின் பிறநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை மட்டுப்படுத்தவும், தொழில் நிமித்தம் தங்கி இருப்பவர்களின் வருகையை மட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை ஸவூதி அரசு எடுக்க வேண்டும்.
ஸவூதி அரசிற்கு ஹஜ் உம்ரா வருகையால் வெளிநாட்டுச் செலாவணியை ஈட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதனை நாம் அறிவோம்.
அரபா, மினா, முஸ்தலிபா போன்ற பிரதேசங்களின் அவற்றின் எல்லைகளின் கொள் அளவிற்கு அதிகமான எண்ணிக்கையில் யாத்திரிகர்களது உள்வருகையை ஊக்குவிக்கும் விதத்தில் அதி சொகுசு உட்கட்டமைப்புகள் அமைகின்ற பொழுது புனித தலங்களில் சனநெரிசல் அதிகரிப்பது சாதாரண விடயமாகும்.
இரு புனித தலங்களையும் ஏனைய புனித பிரதேசங்களையும் விஸ்தரித்து பாரிய உட்கட்டமைப்புகள், பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற் கொள்ளும் ஸவூதி அரசிற்கு நன்றிகளை தெரிவிப்பதோடு எனது மேற்படி ஆதங்க அவதானங்களையும் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு ஹஜ் விவகாரங்களில் ஒத்துழைக்கும் பழைய பொறிமுறையை மீண்டும் உயிர்ப்பித்து அவற்றின் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைகள் தொழில்நூட்ப உதவிகளையும் ஸவூதி அரசு பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஸவூதி அரசு அல்லாஹ்வின் விருந்தினர்களை உள்வாங்குவதில் கவனிப்பதில் ஆர்வம் காட்டுகிறது என்பது உண்மைதான், ஆனால் ஏனைய முஸ்லிம் நாடுகளும் தத்தமது நாட்டு மக்களுக்கு போதிய அறிவையும் தெளிவையும் வழங்கி முன்னுரிமை அடிப்படையில் யாத்திரிகளுக்கு அவகாசம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்தல் கட்டாயமாகும்.
*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 25.02.2025 || SHARE
www.inamullah.net
يرجى ترجمة هذه المقالة ورفعها إلى السلطات السعودية وإدارة شؤون الحرمين الشريفين ومنظمة التعاون الإسلامي وهيئة كبار العلماء



