இலங்கையின் ஆடை ஏற்றுமதி வளர்ச்சியைப் பதிவு செய்தது – பெப்ரவரி மாதத்தில் 2.3 சதவீத வளர்ச்சி

இலங்கையின் ஆடை ஏற்றுமதி கடந்த பெப்ரவரி மாதத்தில் 2.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஆடை ஏற்றுமதி 407.93 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த ஆடைக்கைத்தொழில் சங்கங்களின் ஒன்றியத்தினது தற்காலிக தரவுகளின்படி, ஒட்டுமொத்த ஏற்றுமதி மேல்நோக்கிய போக்கைக் காட்டினாலும், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற முக்கிய சந்தைகளில் செயல்திறன் குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 7.43 சதவீதம் குறைந்து, 153.11 மில்லியன் டொலராகவும் பிரித்தானியாவுக்கான ஏற்றுமதி 14.58 சதவீதம் குறைந்து 54.85 மில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.
எனினும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆடை ஏற்றுமதி 7.54 வீதம் அதிகரித்து, 120.69 மில்லியன் டொலராகவும் மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதி 39.85 வீதம் அதிகரித்து, மொத்தம் 79.28 மில்லியன் டொலராகவும் பதிவாகியுள்ளதாக ஒன்றிணைந்த ஆடைக்கைத்தொழில் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

