News

முன்னைய அரசாங்கம் அதானி குழுமத்துடன் எந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தாலும், அவர்கள் எங்கள் விலையை ஏற்காத வரை நாம் ஒருபோதும் முன்னெடுக்க மாட்டோம் ; ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க திட்டவட்டமாக அறிவிப்பு

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தம்: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் உறுதியான நிலைப்பாடு


ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான மின் கொள்முதல் ஒப்பந்தத்தை, தமது அரசாங்கம் முன்மொழியும் விலையை நிறுவனம் ஏற்காவிட்டால் முன்னெடுக்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


தேசிய மக்கள் சக்தி (NPP) தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், முந்தைய அரசாங்கம் ஒரு யூனிட்டுக்கு 8.26 அமெரிக்க டொலர் சென்ட் (8.26 $ சதம்)என்ற விலையை ஏற்றுக்கொண்டிருந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் வேறு நிறுவனத்துடன் ஒரு யூனிட்டுக்கு 4.57 அமெரிக்க டொலர் சென்ட் (4.57 $ சதம்) என்ற விலையில் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது ரூபாவில் ஒரு யூனிட்டுக்கு 25 ரூபாவிற்கு பதிலாக 13 ரூபா என்ற வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
“முன்னாள் ஜனாதிபதி எப்படியாவது முந்தைய ஒப்பந்தத்தை [அதானி குழுமத்துடன்] முன்னெடுக்குமாறு கூறியதை நான் பார்த்தேன்.

ஆனால், எந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தாலும், அவர்கள் எங்கள் விலையை ஏற்காத வரை நாம் ஒருபோதும் முன்னெடுக்க மாட்டோம்,” என அவர் உறுதியாகக் கூறினார்.


மேலும், இந்த கூடுதல் செலவுகள் எங்கு செல்கின்றன என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, முந்தைய அரசாங்கங்களில் ஊழல் நடந்ததாகவும் குற்றம் சாட்டினார்.


அதானி குழுமம் பின்வாங்கியது
இதற்கிடையில், அதானி குழுமம் கடந்த பெப்ரவரியில், 442 மில்லியன் டொலர் மதிப்பிலான மன்னார் காற்றாலை மின் திட்டத்தில் இருந்து முற்றாக விலகுவதாக அறிவித்தது. இலங்கை அதிகாரிகள் ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்ய முயன்றதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


“அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, இலங்கையில் உள்ள காற்றாலை எரிசக்தி திட்டம் மற்றும் இரண்டு மின் பரிமாற்ற திட்டங்களில் இருந்து மேலதிக ஈடுபாட்டை மரியாதையுடன் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது,” என அந்த குழுமம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button