News

வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்திற்காக இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது ; ஜனாதிபதி

*முழுமையான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க*

இலங்கையில் போர் முடிவடைந்த போதிலும், முழுமையான சுதந்திரம் இன்னும் அடையப்படவில்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (19) நடைபெற்ற தேசிய ரணவிரு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இலங்கையில் முழுமையான வெற்றியாளர்கள் இல்லை எனவும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் சமாதானம் முழுமையாக நிலைநாட்டப்படும் போது மட்டுமே முழுமையான வெற்றியாளர்களாக மாற முடியும் எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “நாம் இதுவரை ஏராளமான இரத்தத்தைச் சிந்தியிருக்கிறோம். இந்த மண்ணை நனையச் செய்யும் அளவுக்கு இரத்தம் சிந்திய இனமாகவும், ஆறுகள் இரத்தத்தால் நிரம்பி வழியும் அளவுக்கு துன்பங்களை அனுபவித்த இனமாகவும், பெற்றோர்களின் கண்ணீரால் ஆறுகள் பெருக்கெடுத்த இனமாகவும் நாம் இருக்கிறோம். போரின் பயங்கரமான வலிகளையும், மிகக் கொடுமையான அனுபவங்களையும் சந்தித்த மக்களாக நாம் உள்ளோம். இவை அனுபவங்களாக இருந்தால், மீண்டும் இத்தகைய நிலைமைகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.

நாம் இன்னும் முழுமையான வெற்றியாளர்கள் இல்லை. முழுமையான வெற்றியாளர்களாக மாறுவது, இந்நாட்டில் சமாதானத்தை உருவாக்குவதன் மூலமே சாத்தியமாகும். எனவே, பயமின்றி சமாதானத்திற்காக எடுக்கக்கூடிய ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுக்க நாம் தயாராக இருக்கிறோம்.

மீண்டும் போர் பற்றிய பயம் இல்லாத ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும். இது மிகவும் கடினமான பணி என்பதை நான் அறிவேன். ஆனால், எவ்வாறேனும் நாம் வெற்றிகரமாக்க வேண்டிய பணியாகும். வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்திற்காக இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

உண்மையான தாய்நாட்டு சுதந்திரம் என்பது, போரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம் முழுமையான சுதந்திரத்தைப் பெறவில்லை. தாய்நாட்டு முழுமையான சுதந்திரம் என்றால் என்ன? இன்றும் மழை பெய்யத் தொடங்கும் போது, நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் 4,900 வீடுகள் இருப்பதால் பயமளிக்கும் நிலைமை உருவாகிறது. இந்தப் பகுதிகளில் எந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்படும் என்ற பயம் இருக்கிறது. இதுவா சுதந்திரம்? உலகில் எங்காவது மோதல் ஏற்பட்டால், அதனால் நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்ற பயம் இருக்கிறது. இதுவா சுதந்திரம்? நாம் பொருளாதார ரீதியாக திவாலான நாடாக இருக்கிறோம். எங்கே நமக்கு சுதந்திரம்? எங்கே நமக்கு இறையாண்மை?

இன்று நாம் பொருளாதார இறையாண்மையை இழந்த நாடாக இருக்கிறோம். இது உண்மை. நமது பொருளாதார முடிவுகளை எடுப்பதற்கு எங்களுக்கு வலிமை இல்லை. எனவே, இந்த தாய்நாட்டை உலகின் முன்னால் பெருமையுடன் நிற்கும் ஒரு நாடாக மாற்றுவதற்கு, பொருளாதார மாற்றத்தை நாம் அடைய வேண்டும். சட்டத்தின் ஆட்சியை எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் இந்த நாட்டில் நிலைநாட்ட வேண்டும். நமது நாட்டின் ஆட்சி முறைமை பற்றி உலகம் பாராட்ட வேண்டும். குற்றங்கள், போதைப்பொருள், தொற்றுநோய்கள் இல்லாத ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும். மோதல்கள், வெறுப்பு இல்லாத ஒரு நாட்டை உருவாக்க வேண்டும். அங்கேதான் முழுமையான சுதந்திரமும், தாய்நாட்டின் வலிமையான இறையாண்மையும் உருவாகும்,” என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button