கனேவல்பொல முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி ஷாரா பர்ஷாத் அகில இலங்கை கணித ஒலிம்பியாட் போட்டிகளில் தேசியமட்டத்திற்கு தெரிவாகி பாடசாலை வரலாற்றில் அசத்தல் சாதனை

அனுராதபுர மாவட்டம், கெக்கிறாவை கல்வி வலயத்திற்குட்பட்ட கனேவல்பொல முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தரம் ஆறில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவி ஷாரா பர்ஷாத் அகில இலங்கை கணித ஒலிம்பியாட் போட்டிகளில் தேசியமட்டத்திற்கு தெரிவாகி சாதனை படைத்திருக்கிறார்.
வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம், மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் இருந்து கணித ஒலிம்பியாட்டின் தேசிய போட்டிகளுக்கு 75 மாணவர்கள் தெரிவாகி இருக்கிறார்கள். இவர்களில் 6 மாணவர்கள் முஸ்லிம் மாணவர்களாவர்.
கடந்த வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் விசேட சித்திபெற்ற ஷாரா கனேவல்பொல முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் கல்விப்பயணத்தில் தேசியமட்ட ஒலிம்பியாட் போட்டிகளுக்கு தெரிவாகி இருக்கும் முதல் மாணவி எனும் பெயரை பதிவு செய்திருக்கிறார்.
கெக்கிறாவை கல்வி வலயத்தில் அமைந்திருக்கும் பல முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து இவ்வருட தேசிய மட்ட போட்டிகளுக்கு இரண்டு மாணவர்களே தெரிவாகியிருக்கின்றனர் அதில் ஒருவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மட்ட போட்டியிலும் வெற்றிவாகை சூடி ஊருக்கும், தான் கற்றுக்கொண்டிருக்கும் பாடசாலைக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித்தர பிரார்த்தனைகளுடன் சேர்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
- Razana Manaf –






