News

உலகின் மிக நீளமான குரங்குப் நாடாப்புழு குருநாகலையில் 10 வயது சிறுவனின் உடலில் கண்டறியப்பட்டது



குருணாகலையில் 10 வயது சிறுவனின் உடலில் 70 செ.மீ நீளமான குரங்கு நாடாப்புழு (Monkey Tapeworm) கண்டறியப்பட்டுள்ளது.

இது உலகில் இதுவரை கண்டறியப்பட்ட மிக நீளமான குரங்குநாடாப் புழு என இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) உறுதிப்படுத்தியுள்ளது.

**மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் கருத்து** 


மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் சுரங்க தொலமுல்ல, இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட மிக நீளமான குரங்குநாடாப் புழு 40 செ.மீ நீளமுடையதாக இருந்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்தார். “இந்த குரங்கு புழு Bertiella இனத்தைச் சேர்ந்தது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இதன் இனம் குறித்த மேலதிக ஆய்வுகள் தொடர்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

**மனிதர்கள்/குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்?** 
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒட்டுண்ணியியல் துறைத் தலைவரும் ஆலோசக வைரஸியல் நிபுணருமான டொக்டர் ரோஹித முத்துகல, இந்த குரங்கு புழுவின் இயற்கை புரவலர்கள் (Host) குரங்குகள் என விளக்கினார். 

குரங்குகளின் மலம் மண்ணை மாசுபடுத்தும்போது, அந்த மலத்தில் உள்ள புழு முட்டைகளை மண்ணில் வாழும் பூச்சிகள் (Mites) எடுத்துச் செல்கின்றன. இந்த முட்டைகள் பழங்கள் அல்லது மண்ணுடன் தொடர்பு கொள்ளும்போது, அவை மாசடைகின்றன. மாசடைந்த பழங்களை உண்பதன் மூலமோ அல்லது மாசடைந்த மண்ணுடன் தொடர்பு கொள்வதன் மூலமோ மனிதர்கள், குறிப்பாக குழந்தைகள், இந்த புழுவால் பாதிக்கப்படலாம். 

குருணாகலை மற்றும் அனுராதாபுரம் போன்ற குரங்குகள் அதிகம் வாழும் பகுதிகளில் இது பொதுவாக ஏற்படுவதாக டொக்டர் முத்துகல சுட்டிக்காட்டினார்.

**அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்** 


டொக்டர் ரோஹித முத்துகல, இது பெரிய அளவில் ஆபத்தான நோய் இல்லையெனினும், குழந்தைகளுக்கு இது தொந்தரவாக இருக்கும் என்று தெரிவித்தார். 

இந்த புழுவால் ஏற்படும் அறிகுறிகளாக வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு மற்றும் சோர்வு ஆகியவை உள்ளன. இந்த புழு  மனிதனின் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதாக அவர் விளக்கினார். மேலும், புழு வளரும்போது, அதன் பகுதிகள் உடைந்து மலத்துடன் வெளியேறுவதை கவனிக்க முடியும் என்றார்.

**தடுப்பு நடவடிக்கைகள்** 
– தரையில் கிடைக்கும் பழங்களை உண்பதற்கு முன் நன்கு கழுவ வேண்டும். 
– குழந்தைகள் உணவு உண்ணும் முன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். 
– தரையில் விளையாடும் குழந்தைகள் நகங்களை குறுகியதாக வைத்திருக்க வேண்டும். இதனால், மாசடைந்த மண் நகங்களில் தங்குவது தவிர்க்கப்படும். 

இந்த தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் குரங்கு புழு தொற்றை தவிர்க்கலாம் என்று டொக்டர் முத்துகல அறிவுறுத்தினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button