News

மீண்டும் மீண்டும் நீதி மறுக்கப்பட்ட நீதியரசர் லபார்! Deep State இற்கு தலைவணங்குகிறதா NPP?



– சமூக நீதிக் கட்சி கேள்வி
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக கடமையாற்றிய நீதியரசர் லபார் கடந்த ஜூன் 18 ஆம் திகதி, உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற நிர்ப்பந்திக்கப்பட்டார்.

நீதித்துறையில் தனது நேர்மைக்காகவும், திறமைக்காகவும் மிகவும் மரியாதைக்குரிய ஒரு இடத்தை வகித்தவர் நீதியரசர் லபார்.

நியாயமாகப் பார்த்தால் நேர்மைக்கு முன்னுரிமை வழங்குவதை தனது பிரதான கொள்கையாகக் கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி, பதவி உயர்வு என்று வரும் போது இவ்வாறானவர்களுக்கே முன்னுரிமை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தனது சேவைக்காலத்தின் படி சிரேஷ்ட நீதியரசராக இருந்தும் இருமுறை நீதியரசர் லபாருக்கு அநீதி இழைத்திருக்கிறது இந்த அரசு.

முதலில் கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக 4 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்க வேண்டி வந்த போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முதல் இரண்டு சிரேஷ்ட நீதியரசர்களையும், மூன்றாவதாக இருந்த நீதியரசர் லபாரை புறக்கணித்துவிட்டு, நான்காம் ஐந்தாம் சிரேஷ்ட நீதியரசர்களையும் நியமித்தது அரசு.

இந்த சந்தர்ப்பத்தில் இந்த அநீதியை ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற எமது ஊடகவியலாளர் மாநாட்டில் கடுமையாக சாடியிருந்தோம்.

(  https://www.facebook.com/share/v/1EYmuugesQ/  )

எவ்வாறு இந்த அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது? என்று ஜனாதிபதி முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தோம். துரதிர்ஷ்டவசமாக எந்த நடவடிக்கைகளும் அரச தரப்பால் மேற்கொள்ளப்படவில்லை.

ஒரு முறை நீதி மறுக்கப்பட்ட நிலையில் அதனை திருத்திக்கொள்ள கிடைத்த “அரிய சந்தர்ப்பம்” தான் உயர் நீதிமன்ற நீதியரசர் காமினி அமரசேகர ஜூன் 20 ஓய்வு பெறுகின்ற போது அந்த வெற்றிடத்திற்கு நீதியரசர் லபாரை நியமிப்பது. இதன் மூலம் அவருக்கு ஏற்கனவே மறுக்கப்பட்ட நீதி ஏதோவொரு வகையில் சரி செய்யப்பட்டிருக்கும். நீதியரசர் லபாரும் 63 வயதில் ஓய்வு பெறாமல் இன்னும் 2 வருடங்கள் உயர் நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றிவிட்டு 65 வயதில் ஓய்வு பெற்றிருப்பார்.

இந்த நிலையில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம், இந்த வெற்றிடத்தை நிரப்ப நீதியரசர் லபாரின் பெயரை தனது முன்மொழிவாக  அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பியிருந்தார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த முன்மொழிவை அரசியலமைப்பு பேரவையிலிருந்து வாபஸ் வாங்கியுள்ளார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க.

இந்த இடத்தில் எழும் கேள்வி என்னவென்றால், ஜனாதிபதி அனுப்பிய முன்மொழிவினை வாபஸ் வாங்கக்கோரி அழுத்தம் கொடுத்த அந்த “ஆழ்நிலை அரசின் (Deep State)” கை யாருடையது? என்பதுதான்.

நீதியரசர் லபாரின் பதவி உயர்வை இரண்டு முறை தடுத்தவர்களும், ஜனாதிபதியே முன்மொழிந்த பின்னர் அதனை வாபஸ் வாங்க வைத்தவர்களும் ஆழ்நிலை அரசின் (deep state) முக்கிய கைகளாகவே இருக்க முடியும். நீதியரசர் லபாரின் கடந்த கால தீர்ப்புகள் சில நேரங்களில் நீதித்துறையின் பெரிய கைகளுக்கு எதிராகவும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதனை வைத்துப் பார்க்கும்போது, NPP அரசு “முற்றாக ஆழ்நிலை அரசுக்கு (deep state) தலைவணங்கும் நிலைக்கு” சென்றிருக்கிறதா என்ற பெரிய கேள்வியை எழுப்புகிறது.

அவ்வாறு நீதி, அநீதி என்பவற்றை கருத்திற் கொள்ளாமல், நிழல் அரசுக்கு முழுமையாக தலைவணங்கும் நிலைக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் சென்றிருப்பின், அது அவர்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கு “முற்றிலும் மாற்றமான ஒரு வலதுசாரி அரசாக” ஈற்றில் கொண்டுபோய் நிறுத்தும் செயற்பாடாக அமையும் என்பதனையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

23.06.2025

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button