அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு எந்தத் திட்டமும் இல்லை ; ஈரான் ( அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்கள் பேச்சுவார்த்தைகளுக்கு எதிரான துரோகம் என மேலும் தெரிவிப்பு )

**ஈரான் வெளியுறவு அமைச்சர்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கு திட்டமில்லை**
தெஹ்ரான்: ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு எந்தத் திட்டமும் இல்லை என வியாழக்கிழமை இரவு தொலைக்காட்சி நேர்காணலில் திட்டவட்டமாக மறுத்தார். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பயங்கரவாத ஆட்சியின் ஈரான் மீதான போரில் அமெரிக்காவின் உடந்தையை அவர் கடுமையாக கண்டித்தார்.
ஈரான் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அமெரிக்காவுடன் மறைமுக அணு ஆயுதப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்ததாகவும், ஆனால் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை விடுத்து வேறு வழியைத் தேர்ந்தெடுத்ததாகவும் அராக்சி குற்றம்சாட்டினார்.
அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்கள் பேச்சுவார்த்தைகளுக்கு எதிரான துரோகம் என்று அவர் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின், அடுத்த வாரம் ஈரானுடன் அணு ஆயுதப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்ற கூற்றை மறுத்த அராக்சி, “பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து எந்த ஒப்பந்தமும் இல்லை. பேச்சுவார்த்தை குறித்து எந்த உரையாடலும் நடைபெறவில்லை. தற்போது பேச்சுவார்த்தை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது,” என்றார்.
ஈரான் தொடர்ந்து இராஜதந்திரத்துக்கு உறுதியாக இருந்தாலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் விளக்கினார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானின் அணு ஆயுத வசதிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அந்த பாதிப்புகள் சிறியவை அல்ல என்றும், அவற்றின் அளவை ஈரான் மதிப்பீடு செய்து வருவதாகவும் அராக்சி தெரிவித்தார்.
“பேச்சுவார்த்தைகளுக்கு பொருத்தமான சூழல் தயாராக உள்ளதா என்பதை இப்போதைக்கு கூறுவது மிகவும் முன்னதாக உள்ளது,” என்றார்.
கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் ஈரான் மீது 12 நாட்களுக்கு ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்து, ஈரானின் இராணுவ, அணு ஆயுத மற்றும் குடியிருப்பு பகுதிகளைத் தாக்கியது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 22ஆம் தேதி அமெரிக்கா ஈரானின் நதான்ஸ், போர்டோ மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு ஆயுத வசதிகளைத் தாக்கியது.
இதற்கு பதிலடியாக, ஈரான் இராணுவப் படைகள் உடனடியாக எதிர்த்தாக்குதல் நடத்தின. இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் விண்வெளிப் பிரிவு, ‘உண்மையின் வாக்கு III’ என்ற பெயரில் 22 அலை அலையாக ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மீது நடத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நகரங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.
ஜூன் 24ஆம் தேதி அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம், இந்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்தது.



