News

மத்திய மாகாண இஸ்லாமிய தின விழா 2025

மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.உனைஸ் அவர்களின் எண்ணக் கருவில் உருவான மத்திய மாகாண இஸ்லாமிய தின விழாவானது கடந்த 28.06.2025 இல் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தால் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்படி மாகாண இஸ்லாமிய தின விழா நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றியீட்டியோர்களுக்கான பரிசளிப்பு வைபவம் மடவளை மதீனா தேசிய கல்லூரியில் வைபோக ரீதியாக நடந்தேறியது. ஒரு தசாப்த காலத்துக்கும் மேலான இடைவெளியின் பின்னர் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா இரண்டாவது முறையாகவும் இவ்வருடம் நடாத்தப்படுவது பாராட்டத்தக்க விடயமாகும்.

கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய மாகாண மீலாத் தின போட்டிகளிலும் முஸ்லிம் கலாசார போட்டிகளிலும் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சிறப்பு நிகழ்வு, இந்த விழாவின் பிதா மகனான மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவிற்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளர் உனைஸ் எம். ஆரிப் தலைமையில் நேர்த்தியாக நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இவ்விழாவுக்கு மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர்  கௌரவ நிஹால் அலககோன் பிரதம அதிதியாக வருகை தந்து சிறப்பித்தார்.

மத்திய மாகாண கல்வி நிர்வாகத்துக்குப் பொறுப்பான மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் கலாநிதி (திருமதி) எஸ்.பீ. பிஹில்லேகெதர, மத்திய மாகாண கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பணிப்பாளர் திருமதி டீ.கே.எம்.சி .தசநாயக்க மற்றும் கல்வி நலன்விரும்பிகளான அல்ஹாஜ் பவுஸ் ஏ காதர் (உரிமையாளர் -விக்டோரியா மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் ) அல்ஹாஜ் ஏ.ஜி.எம் அஜ்மீர் (உரிமையாளர் -அக்மல் டிரேடிங் பிரைவேட் கம்பெனி ) ஆகியோர் கொளரவ அதிதிகளாகக் கலந்து அரங்கை அலங்கரித்தனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வலய இணைப்பாளர்கள், மத்திய மாகாண பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள், உட்பட   அனைத்தினங்களையும் சார்ந்த பலரும் அதிதிகளாய் வருகை தந்திருந்தனர்.

விசேட பேச்சாளராகக் கலந்து கொண்ட அல்-குள்ளியத்துல் ஹளீமியா அரபுக் கல்லூரியின் சிரேஷ்டவிரிவுரையாளர் அஷ்ஷெய்க் முஃப்த்தி அன்வர் (ஹளீமி)  அவர்களின் விசேட சொற்பொழிவு இவ் விழாவுக்கு மகுடம் சேர்த்தது.

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மீலாத் தின போட்டிகள் மற்றும் முஸ்லிம் கலாசாரப் போட்டிகளில் கலந்து கொண்டு மாகாண மட்ட வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதோடு சகோதர இனத்தைச் சேர்ந்த மாணவர்களின் பங்களிப்பை பாராட்டும் நன் நோக்கில், மாகாண மட்ட மீலாத் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்து சமயத்தைச் சார்ந்த, குரீவல ஹமீதியா கல்லூரியில் கற்கும் இரண்டு மாணவர்களும் மாத்தளை இஸ்மாலியா மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரும் விசேட பரிசுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டமை இவ்விழாவின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும் .

இந்நிகழ்வில் கலந்து  சிறப்பித்த சகோதர இனங்களைச் சேர்ந்த அனைத்து விருந்தினர்களுக்கும் புனித குர்ஆனின் சூரா பாத்திஹா, சூரா பகரா மொழிபெயர்ப்பு விளக்கவுரைப் பிரதிகளுடன் இஸ்லாம் தொடர்பான அடிப்படை விளக்கம் அடங்கிய நூல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டமை  இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் உபாயமாக எல்லோராலும் உணரப்பட்டது.

பாடசாலை மாணவர்களிடையே சீரிய சமயம் சார் நடைமுறைகளை வாழ்வியலின் ஓர் அங்கமாக பின்பற்றச் செய்வதுடன், இஸ்லாமிய கலாசாரத்  திறன்களை ஊக்குவிப்பதோடு, மாணவர்களிடையே சமய சித்தாந்தங்களை  தெளிவு படுத்தி, அருகிக் கொண்டு வரும் இஸ்லாமிய கலை கலாசார விழுமியங்கள்  மற்றும் கலாசாரத் திறன்களை வெளிக்கொணர இவ்வாறான போட்டிகள்   ஏதுவாய் அமைகின்றன.

மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ,எம். ஏ. எம் உனைஸ் அவர்கள்  தனது தலைமை  உரையில்,  இப்பரிசளிப்பு விழாவினை பிரமாண்டமான முறையில் இன்ஷா அல்லாஹ் வருடா வருடம்  நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். இவ்விழாவானது  மத்திய மாகாணத்திலுள்ள சிறந்த முன்னோடிப் பாடசாலைகளைத் தேர்வு செய்து அங்கு  நடாத்தப்படுவதன் நோக்கம் குறித்த பிரதான பாடசாலைகளின் சிறந்த நடைமுறைகளை ஏனைய பாடசாலைகளுக்குக் கொண்டு செல்வதோடு அதிபர்களின் அனுபவப் பகிர்வூடாக ஏனைய பாடசாலைகளையும் ஊக்குவித்து உயர்த்த வழிவகுப்பதாகும் என்ற கருத்தை முன் வைத்தார். மேலும் மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலை மாணவர்களிடையே கல்வி, கலாச்சார, சமூக, சமய விழுமியங்களைக் கட்டியெழுப்புவதில் வலயங்களில் சேவையாற்றும் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள். ஆசிரியர்களின் முன்னெடுப்புகளையும் ஒத்துழைப்புக்களையும் பாராட்டிப் பேசினார். வரவேற்புரையாற்றிய
மடவளை மதீனா தேசிய பாடசாலையின் அதிபர் M.A.C.M. ஜிப்ரில்   தனது உரையில் பாடசாலை நடைமுறைகளை பகிர்ந்து கொண்டதோடு முன்னேற்றப் பாதையில் செல்லும் மதீனா என்ற காணொளியையும் காட்சிப் படுத்தினார்.

அதிதிகளுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் கையேட்டில் சூரா அளக்கின் முதல்   ஐந்து வசனங்கள் இடம் பெற்றிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. விசேட பேச்சாளராக கலந்து கொண்ட அஷ்ஷேஹ்  முஃப்தி அன்வர் (ஹளீமி) அவர்கள்  அதனை கோடிட்டுக் காட்டுகையில் இஸ்லாம் கல்விக்காக வழங்கி இருக்கும் முக்கியத்துவத்தையும் பல்லின சமூக நல்லிணக்கத்தையும்
எம்மால் உள் வாங்க முடிந்தது. நபி (ஸல்) அவர்களுக்கு ஏக இறைவன் இறக்கி வைத்த முதலாவது வஹியுடைய வார்த்தை ‘கற்பீராக’  என்பதாகும். இது மார்க்கம் என்பதும் கல்வி என்பதும் இரண்டல்ல, ஒன்று தான் என்பதையே உறுதி செய்கின்றது. ஆசிரியர்களின் ஆசிரியத்துவம் என்பது நூற் கல்விக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. அது மனிதாபிமானத்துடன் கலந்த பரந்த செயற்பாடாகும். கற்பவனாக இரு, கற்பிப்பவனாக இரு, கற்றலுக்கு உதவுபவனாக இரு, அல்லது அதனை நேசிப்பவனாக இரு ஐந்தாமவனாக இருந்து விடாதே எனும் நபி (ஸல்) அவர்களது போதனையை உதாரணங்களுடன் விளக்கிய விதம் அருமையாக இருந்தது. ஆம், அவரது சிங்கள மொழியிலான சிறப்புரை  மிகவும் உருக்கமாகவும் சபையோரை ஈர்க்கக் கூடியதாகவும்  அமைந்திருந்தமை  சிலாகிக்கத்தக்கது.

பிரதம அதிதி திரு நிஹால் அலககோன் அவர்கள் தமதுரையில் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் சமூக நல்லிணக்கம் கருதி செய்கின்ற உயரிய சேவையைப் பாராட்டிப் பேசியதோடு, இஸ்லாமிய மார்க்கம்,கல்விக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை வியந்து பேசினார். கௌரவ அதிதிகளில் ஒருவரான கலாநிதி பிஹில்லேகெதர தமதுரையில், நபிகள் நாயகம் அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னார் காட்டிச் சென்ற வழிகாட்டிகளை நினைவூட்டி வாழ்வியலின் அங்கமாகப் பின்பற்ற மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் வரவேற்கத்தக்கவை எனக் குறிப்பிட்டதுடன், மனிதன் தான் வாழ்நாள் முழுவதும் கல்வியோடு ஏதோ ஒரு வகையில் இணைந்திருக்க வேண்டும் என்பதை மௌலவி முப்தி அன்வர் அவர்களது உரையை மேற்கோள் காட்டக் கூறினார்.
கௌரவ அதிதி திருமதி தசநாயக்க அவர்கள் தமதுரையில், தாம் கற்கின்ற காலம் முதல் இன்று வரை பல முஸ்லிம் நண்பர்கள் தமக்கிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் சகோதர வாஞ்சையுடன் தம்முடன் பழகுவதாகவும் குறிப்பிட்டார். அவர்களது நற்பண்புகள் தம்மை ஈர்த்துள்ளதாகவும், அவர்களது மும்மொழியாற்றல், சகஜமாகப் பழகும் தன்மை எனபன நாட்டில் இணங்களிடைய சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்ப வழிவகுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மீலாத் மற்றும் முஸ்லிம் கலாசாரப் போட்டிகள் பாடசாலை மட்டத்தில் தனித்தனியாக நடாத்தப்பட்டு வெற்றியாளர்கள் வலைய மட்டப் போட்டிகளுக்காக அனுப்பப்படுவார்கள். மத்திய மாகாணத்தில் உள்ள பதினைந்து கல்வி வலயங்களுள் பனிரெண்டு வலயங்களில் முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. எனினும் நாஉல, ஹட்டன், நுவரெலியா ஆகிய வலயங்களில் தலா ஒரு பாடசாலை வீதமும் தெல்தெனிய வலயத்தில் இரண்டு பாடசாலைகளுமே உள்ளன. எனவே  ஹட்டன், நுவரெலியா வலயப் பாடசாலைகள் கொத்மலை வலயப் பாடசாலைகளுடன் வலய மட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளும். இது போல, தெல்தெனிய வலயப் பாடசாலைகள் வத்தேகமை வலயப் பாடசாலைகளுடனும், நாஉல வலயப் பாடசாலை கலேவளை வலயப் பாடசாலைகளுடனும் வலய மட்டத்தில் போட்டியிடும். கண்டி, கட்டுகஸ்தோட்டை, தெனுவர, கம்பளை, மாத்தளை ஆகிய வலயங்களில் அந்தந்த வலயங்களுக்குரிய பாடசாலைகள் மாத்திரம் வலய மட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளும். மேலும் முஸ்லிம் பாடசாலைகள் அல்லாத பாடசாலை மாணவர்களும் முஸ்லிம் அல்லாத மாணவர்களும் தத்தமது பாடசாலைகளுக்கூடாக விண்ணப்பித்து வலய மட்டப் போட்டிகளில் கலந்து கொள்வர்.  வலய மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளுக்காக முன்நிறுத்தப்படுவர். இவ்வினையில் இறுதியாக 2024ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற 550 இற்கும் அதிகமான வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்ப்பட்டமை  பாராட்டுக்குரிய பணியாய் பலராலும்
பேசப்பட்டது.

விழாவின் போது மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பயன்பாட்டுக்காக கௌரவ அதிதிகளில் ஒருவரான அல்ஹாஜ் ஏ.ஜி.எம். அஜ்மீர் அவர்கள் பிரின்டர் இயந்திரம் ஒன்றை வழங்கி வைத்தமை ஒரு முன்மாதிரியான செயற்பாடாகும்.
விழா ஏற்பாடுகளில் மடவளை மதீனா தேசிய பாடசாலையின் நிர்வாகக் குழு, ஆசிரியர் குழாம், மாணவர் தலைவர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு, பழைய மாணவர்கள் ஆகியோரது பங்களிப்புக்கள் மிகவும் வரவேற்கத்தக்கது.

இறுதியாக  வத்தேகம வலயத்தைச் சேர்ந்த கல்விப் பணிப்பாளர்  மவுலவி I.ஹாஷிம்  அவர்களின் நன்றியுரையோடும் இனிய துஆ மற்றும் ஸலவாத்தைத் தொடர்ந்து தேசிய கீதத்துடன்  விழா இனிதே நிறைவு பெற்றது.

பஸ்மினா அன்ஸார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button