பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன தொலைபேசியைத் துண்டித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி மாயமா னார்

பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன தொலைபேசியைத் துண்டித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என லஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவிப்பு
கிரிந்த துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை ஒரு கொரிய நிறுவனத்துக்கு முறையற்ற முறையில் குத்தகைக்கு வழங்கி அரசுக்கு 26.3 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன, தனது தொலைபேசியை துண்டித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு, கொழும்பு கூடுதல் நீதவான் ஹர்ஷண கெகுணவெலவிடம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பல தடவைகள் வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் பல்வேறு பொய்யான காரணங்களைக் கூறி தொடர்ந்து வாக்குமூலம் அளிப்பதை தவிர்த்து வருவதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
ராஜித உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு வைத்திய அறிக்கையை அவரது வழக்கறிஞர் மூலம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால், அந்த அறிக்கையில் எவ்வித சட்டப்பூர்வ தன்மையும் இல்லை என ஆணைக்குழு தெரிவித்தது.
அவர் சில சந்தர்ப்பங்களில் நாட்டை விட்டு வெளியே இருப்பதாகவும் கூறுவதாகவும், இவ்வாறு பொய்யான தகவல்களை வழங்கி நீதிமன்றத்தையும், லஞ்ச ஊழல் திணைக்களத்தையும் ஏமாற்றி உள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் சமர்ப்பித்துள்ள வைத்திய அறிக்கைகள் உள்ளனவா என நீதவான் விசாரணை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவை ஆணைக்குழுவின் கோப்புகளில் உள்ளதாக நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
வாரண்ட் பிறப்பிக்க வேண்டுமாயின், அதற்குரிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நீதவான் குறிப்பிட்டார். மேலும், இவ்வாறான வழக்கில் சந்தேக நபரை கைது செய்ய லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக, அப்போதைய மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த உபாலி லியனகே என்பவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி ஜயதுங்கவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
உபாலி லியனகே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இவ்விவகாரத்தில் வேறு சந்தேக நபர்கள் உள்ளனரா என பிரதான நீதவான் கேட்டபோது, முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர் (சட்டம்) சுலோசனா ஹெட்டியாராச்சி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
1994 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டில் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



