இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அரசின் முடிவுக்கு முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அரசின் முடிவுக்கு முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் சங்கம் எதிர்ப்பு
தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம், சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா கூறுகையில், இவ்வாறு சுற்றுலாப் பயணிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது, சுற்றுலாத் துறையில் பணியாற்றும் உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
மேலும், சில சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கு போதிய அனுபவம் இல்லாததால், விபத்துகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடவடிக்கை நேற்று (03) முதல் ஆரம்பிக்கப்பட்டது. இது, கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சிறப்பு சேவை மையம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

