மதுபானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்து குடிகாரர்களை மயக்கமடைய செய்து அவர்களின் பணம்,மொபைல், நகைகளை அபகரித்து முச்சக்கர கொள்வனவு செய்து, அதில் போதைப்பொருள் வியாபாரம் செய்துவந்த நபர் சிக்கினார்

போதைப்பொருளை கலந்து மதுபானம் வழங்கி பணம் மற்றும் நகைகளை அபகரித்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (05) அன்று கைது செய்யப்பட்டு நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் பிலிமத்தலாவை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய அஜித் கீர்த்தி லால் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுபான கடைகளுக்கு சென்று, அங்கு வருபவர்களுடன் நட்பு கொண்டு, சந்தேக நபரின் செலவில் அவர்களுக்கு மதுபானங்களை வாங்கி அதில் போதைப்பொருள் மற்றும் மாத்திரைகள் கலந்து கொடுத்துள்ளார்.
அதைக் குடித்த நபர்கள் சுயநினைவை இழந்த பிறகு, அவர்கள் வசம் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை அபகரித்துக்கொண்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக நாவலப்பிட்டி மற்றும் கம்பளை பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணைகளில், சந்தேக நபர் பிலிமத்தலாவ பகுதியில் தங்கியிருந்து குளிர்சாதன பெட்டிகள் பழுதுபார்க்கும் போர்வையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் ஏற்றிக்கொண்டு முச்சக்கர வண்டியில் கினிகத்தேன பகுதிக்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 4 மில்லி கிராம் ஹெரோயினுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனை மற்றும் அபகரிப்புகள் மூலம் கிடைத்த பணத்தில் முச்சக்கர வண்டியை வாங்கியதாக சந்தேக நபர் நாவலப்பிட்டி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

