இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநரின் பெயரில் பேஸ்புக் கணக்கு ஆரம்பித்து, அதன் மூலம் இளம் பெண்களுக்கு நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி அவர்களின் ஆடைகள் அற்ற படங்களை பெற்ற இளைஞன் கைது

பொல்கஹவெலவில், இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் சோமரத்ன திஸாநாயக்கவின் பெயரை பயன்படுத்தி இளம் பெண்களிடம் இருந்து நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்ற 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) மின்னணு குற்றப்பிரிவுக்கு சோமரத்ன திஸாநாயக்கவினால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
போலி பேஸ்புக் கணக்கு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் இளம் பெண்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்து, அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்றதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
2023ஆம் ஆண்டு முதல் இந்த மோசடியில் ஈடுபட்ட இந்த இளைஞர், 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 20 பெண்களிடம் இருந்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்றுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
பொல்கஹவெலவில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபரிடம் இருந்து, 06 பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசாரணைகளின் போது, போலி பேஸ்புக் கணக்கு மூலம் பெண்களை தொடர்பு கொண்டு, வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
**மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.**

