ஒரு விடயம் உண்மையென்றால் பாராளுமன்றில் கூறமாட்டேன் பொய் என்றால் பாராளுமன்றில் கூறுவேன் !

ஒரு விடயம் உண்மையென்றால் பாராளுமன்றில் கூறமாட்டேன் எனவும் அந்த விடயத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்க்கு ரகசியமாக தகவல் வழங்குவேன் எனவும் கூறிய ஜனாதிபதி பொய் என்றால் பாராளுமன்றில் கூறுவேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.
கெண்டைனர் விடுவிக்கப்பட்ட விடயத்தில் பிமல் ரத்னாயகவை தொடர்பு படுத்தி பேசுவது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.
பில ரத்னாயகவை குற்றம் சுமத்த முன்னர் அவரின் கடந்த கால செயற்பாடுகளை பார்க்க வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி ஒரு விடயம் உண்மையென்றால் பாராளுமன்றில் கூறமாட்டேன் சி ஐ டியில் முறையிடுவேன் பொய் என்றால் பாராளுமன்றில் கூறுவேன் என குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ..
எமது புலனாய்வு துறையினர் இவர்களது கருத்தை கண்காணிக்கின்றனர். ஆனால், எவருக்கும் ஜனநாயக ரீதியாக அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க நாம் தடையாக இருக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
பாராளுமன்றத்திற்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில் நாடு பாரிய அமெரிக்க வர்த்தக வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்த கூற்றை கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி அந்த கூற்றுக்களை நிராகரித்ததுடன் தேசிய மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கு பதிலாக நாட்டின் வீழ்ச்சியை எதிர்பார்ப்பதற்காகவும் அவர் எதிர்க்கட்சியை குற்றம் சாட்டினார்.
ஆரம்பத்தில் இந்திய – பாகிஸ்தான் பதட்டங்களின் போதும், ஈரான் -இஸ்ரேல் மோதலின் போதும் கொழும்பில் குண்டுகள் வெடிக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள், பின்னர் அமெரிக்க வரிகளுடன். பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கை மீதான அமெரிக்க வரிகள் 44% ஆக உயரும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர்கள் கூறினர். இவ்வாறு அமைய வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். இந்த நாட்டில் பொருளாதார சரிவு ஏற்படும் என்று நீங்கள் எப்போதும் கனவு காண்கிறீர்கள். ஆனால் எதுவும் சரியவில்லை. பொருளாதார அழிவைக் கனவு காண்பதை நிறுத்துங்கள். உங்கள் அரசியல் பார்வையை மாற்றுங்கள்’ என்றும் தெரிவித்தார்.
பொது மக்களை சந்திக்க முடியும். கூட்டங்களை நடத்த முடியும். அதற்கு எவ்வித தடைகளும் இல்லை. ஆனால், சூழ்ச்சிகளுக்கு இடமளிக்க மாட்டோம். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போருக்குப் பிறகு, தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொழும்பில் குண்டுகள் வீசப்படும் என்று எதிர்பார்த்தனர்.
இலங்கை மீதான அமெரிக்கா விதித்த பரஸ்பர வரியை 20 வீதமாக குறைப்பதற்கான எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை.
அமெரிக்கா விதித்த வரியை மேலும் குறைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை இடம்பெற்ற கலந்துரையாடல்களில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அதன் விளைவாக வரி 20 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
எங்கள் வர்த்தக இடைவெளியின் அடிப்படையில் எங்களுக்கு 44 வீதம் கிடைக்கிறது. அதுதான் அவர்களின் கொள்கை. அதை 44 வீதத்திலிருந்து 20 வீதமாக குறைப்பது அவர்களுக்கும் எங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் மற்றும் ஒப்பந்தத்தின் ஒரு முக்கியமான பேறுபேறு என்று நாம் நினைக்கிறோம்.
அவர்கள் அதைப் பற்றி எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன் சில HS CODE I விடுவிக்க வேண்டும். இந்த வரி விதிப்பினால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் நாங்கள் கலந்துரையாடினோம்.
ஒரு குறிப்பிட்ட துறையைத் திறப்பது குறித்து நாங்கள் விவாதித்தபோது, சம்பந்தப்பட்ட பங்குதாரர்களை அழைத்து அதன் தாக்கம் குறித்து தொடர்ந்து கலந்துரையாடிய எமது குழு இந்த வெற்றியைப் பெற்றது. இது ஒரு அறையில் நடந்த சதித்திட்டம் அல்ல.
ஒவ்வொரு பங்குதாரரையும் ஈடுபடுத்த நாங்கள் பொறுப்புடன் செயல்பட்டோம். இன்னும் இறுதி ஒப்பந்தம் இல்லை. எங்களுக்கு 20 வீதம் மட்டுமே இருந்தது. அந்த 20 வீதத்தை விடவும் குறைக்க முடியுமா என்பது தொடர்பில் நாம் இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அதற்கான கலந்துரையாடலை தொடங்கியுள்ளோம். இதுவே ஒரு நாடாக நாம் எடுக்க வேண்டிய முடிவு என்றும் ஜனாதிபதி கூறினார்.
முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்த போது புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக அவர் கைது செய்யப்பட்டதாக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி தெரிவித்து வருகின்றனர். புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே அரசாங்கம் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கும் கருத்து முற்றிலும் தவறானது.
நீதிமன்ற தீர்ப்பின் மூலமே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசாரணைகளுக்கு அமைய அவருக்கான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்து அமைப்பை திருப்திப்படுத்த அரசாங்கம் செயற்படுவதாக கூறுவது விந்தையாக உள்ளது. கோட்டாபாய ராஜபக் ஷ அரசாங்கம் உள்ளிட்ட கடந்த கால அரசாங்கங்கள் பயணத்தடைகளை விதித்திருந்தன. இந்த மோசடி கும்பலுக்கு பயந்து நிஷாந்த சில்வா நாட்டை விட்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பியோடினார். நீதியாக செயற்பட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்திய ஷானி அபேசேகர 11 மாதங்கள் சிறையில டைக்கப்பட்டார், ஆனால் தற்போது நீதி முறையாக முன்னெடுக்கப்படுகிறது.
நியாயமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. தவறு செய்தவர்கள் அவற்றை ஒரு செய்தியாகவே பார்க்கின்றனர். ஆனால் தவறு செய்தவர்களுக்கு சட்டம் எவ்வாறு செயற்படும் என்பது தற்போது புரியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக செயலாளரையும் விசாரணை செய்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகரை நிதி மோசடி பிரிவுக்கு அழைத்து வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்து நாம் யாரை விசாரணை செய்வோம் என்பது தெரியாது. போலியான தரவுகளை வைத்து ஊடகங்களின் பேட்டிகளில் சில நாட்களில் அரசு வீழ்ந்து விடும் என்றனர். அத்தோடு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிக்கு முகம் கொடுக்க முடியாமல் போகும் என்றனர். இவ்வாறான குரூர சிந்தனைகளில் எதிர்க்கட்சிகள் செயற்படக் கூடாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்ட மூலம் தொடர்பாக ஜனாதிபதி தெரிவிக்கையில், மின் கட்டணம் அதிகரிக்கும் என பாராளுமன்றத்தில் பல நிபுணர்கள் பேசினர். அது தொடர்பான தரவுகளை தவறாக சமர்ப்பித்தனர். மின்சார சபையில் பல பில்லியன் கடன்கள் செலுத்த வேண்டியிருந்து. அவற்றை செலுத்துவதோடு மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். நாம் கட்டாயம் மின் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றரர்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கெரவலப்பிட்டி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையே முரண்பாடு ஏற்பட்டது. ஒருவர் கொரியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பியதோடு மற்றவர் ஜப்பானுடன் இணைந்து பணியாற்ற விரும்பினார். இதன் விளைவாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தை அப்போது உருவாக்க முடியாமல் போனது. இதனால், மக்கள் இன்று அதிகமான பணத்தை மின் கட்டணமாக செலுத்து நேர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுவைகள் குறித்து தெரிவிக்கையில் இவர்களுக்கு எவ்விதமான விசேட சலுகைகளும் வழங்கப்படாது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி பகுதியளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய கொடுப்பனவும் இரத்துச் செய்யப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதற்கு எதிரக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். ஆனால் இந்த யோசனையை எதிர்க்கட்சியினர் தான் முதலில் கொண்டு வந்தார்கள். இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கும் என்று இவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றார்.
ஊழல்வாதிகளை தண்டிக்கும் மக்கள் ஆணை 2015 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்றது. நாமும் பல மோசடிகள் தொடர்பான ஆவணங்களை முன்வைத்தோம். எம்மிடம் நன்றாக கதைத்து விட்டு ஒரு தரப்பினர் மோசடியாளர்களுக்கு சார்பாக செயற்பட்டனர். மாரப்பன என்ற பெயரை குறிப்பிடுகிறேன் பிற விடயங்களை தேடிப்பாருங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி குறிப்பிடுகையில் பல்வேறு பகுதிகளிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறேன். பாதாள குழுக்களுடன் பொலிஸ் மற்றும் இராணுவத்தில் ஒரு சிலர் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள். கூலிப் படையாக செயற்பட்டு விட்டு பின்னர் தனது சீருடையை அணிந்து கொள்ளும் பாதுகாப்பு தரப்பினரும் இருந்துள்ளார்கள். இராணுவ முகாமில் இருந்த துப்பாக்கிகள் கடந்த காலங்களில் மாயமாகியுள்ளன. 73 ரி-56 ரக துப்பாக்கிகள் பாதாள குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த பத்து மாத காலத்தில் அவற்றில் 35 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மிகுதியானவற்றை கைப்பற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதாள குழுக்களை இல்லாதொழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எமக்கு மேலும் சற்று சந்தர்ப்பம் தாருங்கள். எமது பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. ஆகவே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அரசியல் பிரசாரத்தை மேற்கொள்ளாதீர்கள். இந்த நாடு குற்றங்களின் தேசமாகவே கடந்த காலங்களில் காணப்பட்டது. பாதாள குழுக்களுக்கு அரச அனுசரணையும் வழங்கப்பட்டிருந்தது என்றார்.
வீழ்ச்சியடைந்த நாட்டை முன்னேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து தற்போது சரியான பாதையில் அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கிறது. அதற்காக எதிர்க்கட்சிகளும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். நாங்கள் அரசியல் செய்வோம். எங்களின் குறைபாடுகள் இருந்தால் விமர்சிக்கலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

