வட மாகாணத்தின் முன்னணி பத்திரிகையாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கணபதிப்பிள்ளை குமணனுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) அழைப்பாணை

வட மாகாணத்தின் முன்னணி பத்திரிகையாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கணபதிப்பிள்ளை குமணன், பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) அழைப்பாணை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (JDS) அமைப்பு தனது ‘X’ பதிவில் தெரிவித்துள்ளது.
குமணன், ஆகஸ்ட் 17 ஆம் தேதி முல்லைத்தீவு, அலம்பில் உள்ள CTID துணை நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அழைப்பாணையில் விசாரணைக்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இலங்கை மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன், குமணனுக்கு எதிரான இந்த அழைப்பாணை, பல ஆண்டுகளாக தொடரும் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்களின் ஒரு பகுதியாகும் என தனது ‘X’ பதிவில் குறிப்பிட்டார். TID, CID மற்றும் இராணுவ உளவுத்துறையினர் அடிக்கடி குமணனை தொடர்பு கொண்டு தகவல்களைக் கோருவதுடன், அவரை எச்சரித்து மிரட்டுவதாகவும், அவரது வீட்டிற்கு சென்று பின்தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குமணன் மட்டுமல்லாமல், சிவில் சமூக அமைப்புகள், செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் (PTA) கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட பலரும் இதேபோன்ற அழைப்பாணைகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் வருகைகளுக்கு உள்ளாகி வருவதாக அம்பிகா தெரிவித்தார்.
“ராஜபக்ஷ ஆட்சியின் போது பாதுகாப்பு அமைப்புகள் முறையாகவும் முறைசாராவும் வளர்ந்தன. நல்லாட்சியின் போது இவை அகற்றப்படவில்லை. தற்போதும் அவை அப்போதைய நிலையிலேயே செயல்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் இத்தகைய துன்புறுத்தல்களை நிறுத்த குறிப்பிட்ட உத்தரவுகளை பிறப்பிக்காவிட்டால், இவை தொடரும் என அம்பிகா எச்சரித்தார்.

