News

இலங்கையின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வரும் சட்டவிரோத இஸ்ரேல் ஷபாத் இல்லங்களை பொத்துவில் பிரதேச சபை மூடிவிட முன்வர வேண்டும் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கோரிக்கை

நூருல் ஹுதா உமர்

சிவில் அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் விரல் நீட்டிக்கொண்டிருக்கும் இஸ்ரேலிய ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கடமை அரசியல்வாதிகளுக்கும், ஆன்மீக தலைமைகளுக்கும் எம் எல்லோருக்கும் இருக்கிறது. முஸ்லிம் காங்கிரசை எதிர்த்து பேசி அன்னாசியில் தேர்தல் கேட்டு மக்களை மட்டையர்களாக்கி மு.காவுடன் இணைந்து பொத்துவிலை ஆளும், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் இலங்கையின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வரும் சட்டவிரோத சபாத் இல்லங்களை மூடிவிட வேண்டும். பின்னர் அதனை யாரை கொண்டு திறக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம்.

சட்டவிரோத நிலையங்களை மூடும் அதிகாரம் பிரதேச சபை தவிசாளருக்கு இருக்கிறது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஊடக சந்திப்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

கல்முனையில் இன்று (09) நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால், செயலாளர் நாயகமும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள்,

இந்த நாட்டின் பிரதான வருமான வழிகளில் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் பெற்றது. அதை மேம்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதற்காக நாட்டின் இறைமையை பாதிக்கும் விடயங்களுக்கு அனுமதிக்க முடியாது. அது முஸ்லிம் நாடுகளாக இருந்தாலும் சரி, மேற்கத்தைய நாடுகளாக இருந்தாலும் சரி. இந்த அத்துமீறல்களை இஸ்ரேல் அல்ல பங்களாதேஷ், துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகள் செய்தாலும் சரி நாங்கள் அதை எதிர்ப்போம்.

எங்களை அரச சம்பளம் பெரும் ஒரு படையினர் பின்னாலேயே கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களின் எரிபொருள் விரையமாகுமே தவிர வேறு எதையும் எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாது.

பொத்துவில் அறுகம்பே பகுதியில் அரச அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக இயங்கும் இஸ்ரேலிய வழிபாட்டு தள (சபாத் இல்ல)த்தினால் அருகில் இருக்கும் பள்ளிவாசலும் இருள் சூழ்ந்து  இஸ்ரேலிய வழிபாட்டு தளத்தின் வாகன தரிப்பிடம் போன்று மாறியுள்ளது. கிழக்கில் அரசியல் செய்யும் மூன்று காங்கிரஸ் தலைவர்களும் இந்த விடயங்களில் கவனம் செலுத்தி அந்த பள்ளிவாசலை எதிர்காலத்தில் குறைந்தது மூடிவிடுவதிலிருந்தாவது பாதுகாக்க வேண்டும்.

தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் வாயால் கதைத்தவற்றை தவிர சமூகத்தின் நலனுக்காக இந்த காங்கிரஸ்காரர்கள் எதுவும் செய்யவில்லை. கடந்த காலங்களில் வாயால் பேசிக்கொண்டிருந்ததையே இப்போதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

வடக்கை தமிழ் முதலமைச்சர் ஆளவேண்டும் என்ற எங்களின் கொள்கைப்படி கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம். அதற்காக எதிர்வரும் காலங்களில் சகல காங்கிரஸ்காரர்களையும், பெருந்தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை அமைக்கும் பணியை முன்னெடுத்து வருகிறோம்.

முஸ்லிங்கள் ஒற்றுமையை பலப்படுத்தி தமது உரிமைகளை பெற வேண்டும். இறைமை நிறைந்த அழகிய இலங்கையை பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு நாம் கையளிக்க வேண்டும். முஸ்லிங்களுக்கு நல்லது செய்யாது விட்டாலும் கெடுதலிலிருந்தாவது மக்களை பாதுகாக்க வேண்டியது முஸ்லிம் பிரதிநிதிகளின் கடமை. இஸ்ரேலிய அத்துமீறல்களை கண்டித்து நாங்கள் அங்கம் வகிக்கும் சபைகளில் கண்டன தீர்மானங்களை நிறைவேற்ற தயாராக உள்ளோம்- என்றனர்

இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதி தலைவர் கலாநிதி ஹக்கீம் ஷெரீப், இணைப்பாளர் ஏ.எம். அஹூவர் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button