News

மது அருந்திவிட்டு போலிஸ் நிலையத்தில் பேயாட்டம் ஆடிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

பாதுக்க பகுதியில் நேற்று (15) மாலை மோட்டார் வாகனமொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மோட்டார் வாகனத்தின் சாரதியை கைது செய்ய முயற்சித்த பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்க முயன்ற முன்னாள் சீதாவாக்க பிரதேச சபை உறுப்பினரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் தகவல்களின்படி, கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினரின் தாக்குதலால் பாதுக்க நிலையத்தின் வாகன பிரிவு பொறுப்பதிகாரி காயமடைந்து, தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பாக மோட்டார் வாகனத்தின் சாரதியை கைது செய்ய பாதுக்க பொலிஸ் நிலையத்தின் வாகன பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும், மோட்டார் வாகனமும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டது. ஆனால், இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீதாவாக்க பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் பாதுக்க பொலிஸ் நிலையத்துக்கு வந்து, பொலிஸ் அதிகாரிகளைத் திட்டி, தாக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது, பாதுக்க பொலிஸ் நிலையத்தின் வாகன பிரிவு பொறுப்பதிகாரிக்கு தாக்குதல் நடத்த முயன்ற சந்தேக நபர், பொலிஸாரின் பெரும் முயற்சியால் காவல் மறியலில் அடைக்கப்பட்டார். எனினும், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், காவல் மறியலில் இருக்க முடியாது என்றும் கூறியதால், அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், வைத்தியசாலையிலும் சந்தேக நபர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது தாக்குதலால் காயமடைந்த பாதுக்க பொலிஸ் நிலையத்தின் வாகன பிரிவு பொறுப்பதிகாரியும் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார்.

கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன சாரதி, சந்தேக நபரின் நண்பர் எனவும், இருவரும் நேற்று மாலை மது அருந்தியிருந்ததாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், ஹங்வெல்ல துன்னான பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் சீதாவாக்க பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராகவும், பின்னர் சமகி ஜன பலவேகயவின் கொழும்பு மாவட்ட இளைஞர் விவகார செயலாளராகவும் பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இது தொடர்பாக பாதுக்க பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button