News

தலைமறைவாக வாழ்ந்து வந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன,இன்று திடீரென கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கடந்த சில நாட்களாக கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த நிலையில், இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

ராஜித சேனாரத்னவுக்கு இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணையம் அறிவித்தல் விடுத்திருந்தது. அவர் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைக்கு பதிலளிக்கத் தவறியதை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் மனு தொடர்பாக கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ராஜித சேனாரத்னவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது.

முன்னாள் அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் தொடர்பாக அவர் பலமுறை அழைப்பாணைக்கு பதிலளிக்கத் தவறியதாகவும், வாக்குமூலம் அளிப்பதைத் தவிர்த்ததாகவும் விசாரணை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த வழக்கு, கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்துடன் தொடர்புடையது. இந்தத் திட்டம் ஒரு கொரிய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு ஆணையம் கூறுகிறது.

ராஜித சேனாரத்ன காணாமல் போயுள்ளதாகவும், அவரது தொலைபேசிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவரது வீடு காலியாக இருப்பதாகவும் தெரிவித்த லஞ்ச ஒழிப்பு ஆணையம், அவர் வேண்டுமென்றே கைதைத் தவிர்ப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button