கிராமிய மட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கும், கிராமப்புற வறுமையை குறைப்பதற்காகவும் அரசு நிறுவனத் தலைவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த 2000 டபள் கேப் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு திட்டம்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் துணை அமைச்சர் ருவான் செனரத், அரசு நிறுவனத் தலைவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் 2,000 கேப் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
கிராமிய மட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கு, குறிப்பாக உள்ளூராட்சி அமைப்புகளில் பணியாற்றும் அதிகாரிகள் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், இதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.
“அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று பணிகளை மேற்கொள்ள வசதியாக, அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் 2,000 கேப் வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளோம். இது களப்பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பொறுப்புகளை திறம்பட நிறைவேற்ற உதவும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், கிராமிய மட்டத்தில் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்காக இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்களும் ஒதுக்கப்படவுள்ளதாகவும், இதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துணை அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, செயல்படாத நிலையில் இருந்த பல உள்ளூராட்சி நிறுவனங்கள் மீள இயக்கப்பட்டுள்ளதாகவும், கிராமப்புற வறுமையை குறைப்பதற்காக புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் செனரத் தெரிவித்தார்.



