யுத்தத்தில் எமக்கு வெற்றி நெருங்கியிருந்த நேரத்தில் பிரபாகரன் தப்பிக்க, மகிந்த ராஜபக்ச 48 மணி நேர யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டார் – இதனால் நாம் 500 இராணுவ வீரர்களை இழந்தோம் – ஆனால் முட்டாள் பிரபாகரன் தப்பிச்செல்லவில்லை ; சரத் பொன்சேக்கா

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் வெற்றியை தாமதப்படுத்த முயன்றதாக அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய பொன்சேகா, போரின் போது தான் படுகாயமடைந்த போதிலும், தான் சேவையாற்றிய தலைவர்களால் தேசத் துரோகி என முத்திரை குத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
“2009இல், இலங்கை இராணுவம் புதுக்குடியிருப்பை மூன்று பக்கங்களிலிருந்து சுற்றி வளைத்திருந்தது. இன்னும் 10 கிலோமீட்டர் முன்னேறினால் போதும் என்ற நிலையில் இருந்தோம்,” என்று அவர் கூறினார்.
முல்லைத்தீவு ஜனவரி 26, 2009 அன்று கைப்பற்றப்பட்டு, 12 மணி நேரத்தில் தெற்கிலிருந்து புதுக்குடியிருப்பை நோக்கி இராணுவம் முன்னேறியதாக பொன்சேகா நினைவு கூர்ந்தார்.
ஆனால், அடுத்த நாள், கோட்டாபய ராஜபக்ஷ தன்னை களைப்பாக இருக்கிறீர்களா எனக் கேட்டு, வவுனியாவில் உள்ள ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் கட்டளையை ஒப்படைக்குமாறு கூறியதாக அவர் தெரிவித்தார்.
“வெற்றி நெருங்கியிருந்த நேரத்தில், பிரபாகரனும் அவரது குழுவும் அழிக்கப்படவிருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர்.
ஆனால், அவர்கள்,புலிகளின் வீழ்ச்சியை தாமதப்படுத்த விரும்பினர்,” என்று பொன்சேகா குற்றம்சாட்டினார்.
மேலும், இராணுவம் புலிகளை வீழ்த்தும் தருவாயில் இருந்தபோது, மகிந்த ராஜபக்ஷ ஜனவரி 31 முதல் பெப்ரவரி 1, 2009 வரை 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்ததாகவும், இதற்கு பாதுகாப்பு கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இராணுவத்துக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“இதன் விளைவாக, எனது இராணுவம் ஐந்து கிலோமீட்டர் பின்வாங்க வேண்டியதாயிற்று. இதில் 500 வீரர்களை இழந்தோம். இந்த போர் நிறுத்தம் புலிகளுக்கு மீண்டும் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பளித்தது,” என்று பொன்சேகா குறிப்பிட்டார்.
இந்த போர் நிறுத்தம், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் தப்பிக்க அனுமதிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டதாகவும், நோர்வே மத்தியஸ்தர் எரிக் சோல்ஹெய்முடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் பொன்சேகா குற்றம்சாட்டினார். இது “வெள்ளைக் கொடி சம்பவத்துடன்” தொடர்புடையதாகவும், இவை பின்னர் இராணுவத்தின் மீது பழி சுமத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“பிரபாகரன் முட்டாளாக இருந்தார். போர் நிறுத்தத்தின்போது புலிகள் மீண்டும் எழுச்சி பெறலாம் என நம்பினார். அவர் தப்பிக்கவில்லை, எங்களுடன் போரிட்டார்,” என்று பொன்சேகா தெரிவித்தார்.
மேலும், 2005 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் புலிகள் 2 மில்லியன் டொலர்களை வழங்கியதாகவும், இதனால் மகிந்த ராஜபக்ஷ 150,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் பொன்சேகா குற்றம்சாட்டினார். பிரபாகரன் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும், இந்த பரிவர்த்தனையில் திரான் அலஸ் மற்றும் மலையக அரசியல்வாதி ஒருவர் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த அரசியல்வாதி சமீபத்தில் தொலைக்காட்சியில் தாக்கப்பட்டதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
2010 தேர்தலுக்கு முன் பிரபாகரன் கொல்லப்பட்டால், தமிழ் வாக்காளர்கள் தனக்கு எதிராக வாக்களிப்பார்கள் என மகிந்த ராஜபக்ஷ அஞ்சியதாகவும், இதனால் போரை தாமதப்படுத்த முயன்றதாகவும் பொன்சேகா குற்றம்சாட்டினார்.
“நாம் நாட்டைப் பற்றி சிந்தித்தபோது, அவர் தேர்தலைப் பற்றி மட்டுமே சிந்தித்தார். இதுதான் மகிந்த ராஜபக்ஷவின் மனநிலை. இப்போது அவர் என்னை தேசப்பற்று இல்லாதவன் என்கிறார்,” என்று பொன்சேகா காட்டமாக தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.



