News

நேபாளத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு அரசால் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து ஏராளமான பொதுமக்களும் 2k kids உம் பாரிய போராட்டத்தில் ஈடுபடுவதால் அங்கு பதற்றம்

நேபாளத்தில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்த சில நாட்களில், தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல நகரங்களில் இளைஞர்கள் திரளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினருடனான மோதலில் குறைந்தது 9 பேர் உயிரிழந்ததாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தப் போராட்டங்கள் ‘Gen Z போராட்டம்’ என அழைக்கப்படுகின்றன.

நேபாள காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து காத்மாண்டுவில் மக்கள் திரளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியதால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்தனர்,” என ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்மாண்டு தெருக்களில் “ஊழலை முடிவுக்கு கொண்டு வா, சமூக ஊடகங்களை முடக்காதே”, “சமூக ஊடகங்களை மீட்டெடு”, “இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக” போன்ற பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் பலர் பாடசாலை மற்றும் கல்லூரி சீருடைகளை அணிந்திருந்தனர்.

போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறியபோது, காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும், போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் தண்ணீர் பீரங்கி, கண்ணீர்ப்புகை மற்றும் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றைப் பயன்படுத்தியதாக ‘தி காத்மாண்டு போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததாக அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மோகன் சந்திர ரெக்மி தெரிவித்தார். மேலும், ஏராளமான காயமடைந்த போராட்டக்காரர்கள் சிவில் மருத்துவமனை, எவரெஸ்ட் மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.

இந்தப் போராட்டங்களை அடக்குவதற்காக காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கியதால், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக இரவு 10 மணி வரை (உள்ளூர் நேரம்) ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்,” என காத்மாண்டு மாவட்ட அலுவலக செய்தித் தொடர்பாளர் முக்திராம் ரிஜால் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அரசின் கொள்கைகளைப் பின்பற்றாததாகக் கூறி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அரசு தடை விதித்தது இந்த இளைஞர் போராட்டங்களுக்கு உடனடி காரணமாக அமைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த தளங்கள் நேபாளத்தில் முடக்கப்பட்டுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, வணிகம், செய்திகள் மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள இந்த தளங்களைப் பயன்படுத்திய மில்லியன் கணக்கான பயனர்களை பாதித்துள்ளது.

எனினும், இந்த சமூக ஊடகத் தடை, அரசு மற்றும் அரசியல்வாதிகள் மீதான நீண்டகால பொதுமக்களின் கோபத்தை வெளிப்படுத்துவதற்கு ஒரு தூண்டுதலாக மட்டுமே அமைந்தது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button