இந்நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பதாக ஏற்கனவே மக்களுக்கு வாக்குறுதி வழங்கி உள்ளோம் – அதன்படி இந்நாட்டில் போதைப்பொருள் கலாசாரத்தை முற்றாக ஒழிப்போம் ; பிரதமர்

எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், நாட்டில் போதைப்பொருள் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் தலைவர்கள் போதைப்பொருள் வர்த்தகர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அதிகம் பேசப்படுகின்றது.
அதனை நோக்கும்போது, இங்கு கருத்து தெரிவிப்பவர்கள் காவல்துறையில் அங்கம் வகித்திருக்க வேண்டுமெனத் தோன்றுவதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் கொள்கலன் எங்கிருந்தது? எவ்வாறு வந்தது என எவ்வித அறிவித்தலையும் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.
ஆனால், அது பற்றி நாடாளுமன்றத்தில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
எனினும், இதன் பின்னணியிலுள்ள ஆபத்து மற்றும் அபாயகரம் பற்றி எவரும் கருத்து தெரிவிப்பதில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில், தங்களது தரப்பினர் சந்திக்கும் ஒவ்வொரு தாய்மாரும் இந்த போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிக்குமாறே கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தங்களுடைய பிள்ளைகளை இந்த போதைப்பொருள் கலாசாரத்தில் இருந்து மீட்டுத்தருமாறே தம்மிடம் கோரிக்கை விடுப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன், தாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமையவே இந்த போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

