முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றம் – மகிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராம வீட்டில் இருந்து வெளியேறி மெதமுலனவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல தயாரானார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் முடிவில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவாகின. இதன்படி, இந்த சட்டமூலம் 150 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஆவார்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென் இலங்கையில் மெதமுலனவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல தயாராகி வருவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பது பிரச்சினையாக இல்லாவிட்டாலும், அவர்களுக்கு போதுமான மற்றும் நியாயமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், மஹிந்த ராஜபக்ஷவின் சலுகைகளை குறைப்பதற்கு புலம்பெயர் தமிழ் புலிகள் மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும், இது அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் செயல் என்றும் அவர் கூறினார்.
இந்த கருத்துக்கள், இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற சட்டமூல விவாதத்தின் போது, டி.வி.சானகவால் வெளியிடப்பட்டன.

