சீனாவின் ஆதரவுடன் மீண்டும் தொடங்கியது இலங்கையின் மத்திய விரைவுப் பாதை திட்டம் – ஜனாதிபதி அனுரகுமார சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் நேரடியாக விடுத்த வேண்டுகோளுக்கு கிடைத்தது பலன்

கொழும்பு, செப்டம்பர் 18, 2025: இலங்கையின் மத்திய விரைவுப் பாதை திட்டத்தின் முதல் பகுதி (Section I) மீண்டும் முழுமையாக தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு சீனா-இலங்கை நட்புறவில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதாக சீன தூதர் கி சென்ஹோங் தெரிவித்தார். இத்திட்டத்தை மீளவும் தொடங்குவதற்கு சீன அரசு மற்றும் நிறுவனங்கள் இலங்கை அரசுடன் இணைந்து பல சவால்களை கடந்து உழைத்ததாக அவர் கூறினார். இந்த விரைவுப் பாதை, இலங்கையின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டமாகவும், இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அடையாளமாகவும் விளங்குவதாக அவர் வலியுறுத்தினார்.
நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, இந்த ஆண்டு ஜனவரியில் சீனாவுக்கு மேற்கொண்ட அரசு விஜயத்தின்போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீன நிதியுதவி திட்டங்களை மீளவும் தொடங்குவதற்கு ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்ததாக கூறினார். “இதற்கு அவர் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து திட்டங்களையும் மீண்டும் தொடங்குவதற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார். இதற்காக நாம் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம்,” என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், இந்த விரைவுப் பாதை திட்டத்திற்காக இலங்கை சிறப்பு கடன் வசதி ஒன்றை கோரியதாகவும், அமெரிக்க டொலர்களில் கிடைக்காத நிலையில், சீனா யுவான் நாணயத்தில் கடனை வழங்க ஒப்புக்கொண்டதாகவும் ஜனாதிபதி வெளிப்படுத்தினார். “இதற்கமைய, சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி 2.5% முதல் 3.5% வரையிலான வட்டி விகிதத்தில் கடனை வழங்குவதற்கு தயாராக உள்ளது. இந்த ஆதரவிற்கு நாம் எமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இரு தரப்பினரும், இந்த மத்திய விரைவுப் பாதை இலங்கையின் இணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், சீனா-இலங்கை நட்புறவின் புதிய அடையாளமாக விளங்கும் என நம்பிக்கை வெளியிட்டனர்.
சீன தூதரின் முழு உரை:
மாண்புமிகு ஜனாதிபதி திஸாநாயக்க அவர்களே,
மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களே,
பெருமைமிகு விருந்தினர்கள், சக ஊழியர்கள் மற்றும் திட்டப் பணியாளர்களே,
இன்று, மத்திய விரைவுப் பாதை திட்டத்தின் முதல் பகுதி முழுமையாக மீண்டும் தொடங்கப்படும் இந்த மகிழ்ச்சியான தருணத்தை காண நாம் ஒன்று கூடியுள்ளோம். இலங்கையிலுள்ள சீன தூதரகத்தின் சார்பாக, இத்திட்டத்தின் மீளத்தொடக்கத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து, இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அயராது பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக, அனைவரும் அறிந்த காரணங்களால், இத்திட்டத்தின் முதல் பகுதி குறைந்த செயல்திறனுடன் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதி திஸாநாயக்கவின் தெரிவால் இலங்கை புதிய உத்வேகத்துடன் ஒரு புதிய யுகத்தை அடைந்துள்ளது. இதன் விளைவாக, இத்திட்டம் முழுமையாக மீண்டும் தொடங்கப்பட்டு ஒரு முக்கிய திருப்பு முனையை எட்டியுள்ளது. சீனா-இலங்கை நீண்டகால நட்புறவை மனதில் கொண்டு, சீன அரசு மற்றும் நிறுவனங்கள் பல்வேறு சவால்களை கடந்து, இலங்கை தரப்புடன் இணைந்து இத்திட்டத்தை மீளவும் தொடங்குவதற்கு தீவிரமாக உழைத்துள்ளன. இது உண்மையிலேயே பாராட்டத்தக்க சாதனையாகும்.
மத்திய விரைவுப் பாதை திட்டம் இலங்கையின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டமாகும். இது புதிய இலங்கை அரசாங்கத்தால் மிகவும் மதிப்புமிக்க முன்னுரிமை திட்டமாகவும், நாடு சவால்களை கடந்து தேசிய மறுமலர்ச்சியை அடைவதற்கு முக்கியமான திட்டமாகவும், சீனா-இலங்கை மக்களின் நீடித்த நட்புறவின் புதிய அடையாளமாகவும் விளங்குகிறது. இரு நாடுகளின் தொடர்புடைய அனைத்து தரப்பினரும், நேர்மையான மற்றும் நடைமுறை ஒத்துழைப்பு உணர்வுடன் இணைந்து, இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளை உறுதியாக முன்னெடுத்து, அதனை குறித்த காலத்தில் உயர் தரத்துடன் நிறைவு செய்து, இலங்கை மக்களுக்கு விரைவில் உண்மையான பயன்களை வழங்குவார்கள் என நான் மனதார நம்புகிறேன்.
அனைவருக்கும் நன்றி!



