ஹொங்கொங் புயலில் செல்பி எடுத்த இலங்கை பெண் கைது

ஹொங்கொங்: ‘ராகசா’ புயலின் தாக்கத்தால் ஹொங்கொங்கில் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலையில், 5 வயது குழந்தையை ஆபத்தில் ஆழ்த்தி செல்ஃபி புகைப்படம் எடுக்க முயன்ற இலங்கை மற்றும் இந்திய பெண்கள் இருவர் ஹொங்கொங் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு தாயும், அவரது இலங்கை நண்பரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த குழந்தை இந்தியப் பெண்ணின் மகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை நோக்கி வீசும் ‘ராகசா’ புயலால் ஹொங்கொங் பகுதியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், கடற்கரைப் பகுதிகளைத் தவிர்க்குமாறும் அந்நாட்டு பேரிடர் முகாமைத்துவ அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
புயல் அலைகள் மிகவும் ஆபத்தானவை எனவும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவை தாக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் தனது குழந்தையுடன் புயலின் பின்னணியில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அவரது இலங்கை நண்பர் அந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
புகைப்படம் எடுக்கப்பட்டபோது, திடீரென வந்த பயங்கர அலை மூவரையும் இழுத்துச் சென்றது. இதையடுத்து, மூவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எச்சரிக்கைகளை மீறி, 5 வயது குழந்தையை ஆபத்தில் ஆழ்த்தி புகைப்படம் எடுக்க முயன்றமை தொடர்பாக ஹொங்கொங் காவல்துறையால் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் தனது கைபேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மீட்டர் உயர அலைகள் மூவரையும் இழுத்துச் செல்லும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
‘ராகசா’ புயல் இந்த ஆண்டின் மிக ஆபத்தான புயலாக கருதப்படுகிறது.



