2024 ஆம் ஆண்டு 2,335 இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் சம்பளம், மேலதிக நேரக் கொடுப்பனவு, விடுமுறை ஊதியம் மற்றும் ஊக்குவிப்புத்தொகை என மொத்தம் 339 கோடி ரூபாவுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது அம்பலம்.

கடந்த ஆண்டு (2024) 2,335 இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் சம்பளம், மேலதிக நேரக் கொடுப்பனவு, விடுமுறை ஊதியம் மற்றும் ஊக்குவிப்புத்தொகை என மொத்தம் 339 கோடி ரூபாவுக்கு மேல் (3,395,867,121) வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகச் சட்டம் மற்றும் சுற்றறிக்கைகளின்படி, அனைத்து அரச ஊழியர்களும் தங்கள் வருகை மற்றும் புறப்பாட்டைப் பதிவு செய்ய கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாகும்.
கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் சம்பளம், கூடுதல் நேரம், விடுமுறை ஊதியம் மற்றும் ஊக்கத்தொகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு அரசாங்க ஒருங்கிணைந்த நிதியிலிருந்து வழங்கப்பட்ட மொத்தத் தொகை 230 கோடியே, 86 இலட்சத்து 94 ஆயிரத்து 777 ரூபாவாகும். (2,308,694,777)
மேலும், சுங்க கூடுதல் நேர சரக்கு ஆய்வுக் கட்டணம் மற்றும் தகவல் தொழில்நுட்ப தொடர்பு நிதியத்தால் 108 கோடியே 71 இலட்சத்து 72 ஆயிரத்து 344 (1,087,172,344) ரூபாவை செலுத்தியுள்ளது.
இந்த ஊழியர்கள் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் வரை மேலதிக நேரம் வேலை செய்வதாகவும் வருகை மற்றும் புறப்பாடு குறித்த சரியான உறுதிப்படுத்தல் இல்லாமல் அனைத்து கொடுப்பனவுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது.
அனைத்து அதிகாரிகளும் கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பொதுக் கணக்குக் குழு (COPA) முன்னதாக பரிந்துரைத்தது.
இந்தத் தகவல் 2024ஆம் ஆண்டுக்கான சுங்க செயல்திறன் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது



