மலையக மக்களுக்கு அரசாங்கம் 2000 வீடுகளைக் கையளிக்கவில்லை, வெறும் 2000 காகிதத் தாள்களை தான் கையளிக்கிறது என ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

அரசாங்கத்தினால் இன்று வழங்கப்பட்ட வீட்டு ஆவணப் பத்திரங்கள் வெறும் காகிதத் தாள்களை வழங்கும் ஒரு விளம்பர நிகழ்ச்சி மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அவருடைய சமூக ஊடகப் பதிவொன்றின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “இன்று வழங்கப்படும் இந்த ஆவணமானது வழக்கமாக பயனாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும், மேலும் வீடுகள் ஒப்படைக்கப்படும்போது ஒரு நிகழ்வு நடத்தப்படும். (அவை முடிந்ததும்) இந்நிகழ்வானது “2000 வீடுகளைக் கையளிப்பது அல்ல!”, ஆனால் 2000 காகிதத் தாள்களைக் கையளிப்பதை உள்ளடக்கிய ஒரு விளம்பர நிகழ்வு மாத்திரமே” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த காகித ஆவணம் வழங்கும் நிகழ்வுக்கு எந்த தேவைப்பாடுகளும் இல்லை, கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் அல்லது மலையக சமூகத்திற்காக எந்த ஒரு வேலையும் செய்யப்படவில்லை என்ற உண்மையிலிருந்து பொதுமக்களைத் திசைதிருப்புவதற்கான இது ஒரு தந்திரோபாயம் மட்டுமே என ஜீவன் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக வேதன அதிகரிப்பு இல்லை, வீடுகள் கட்டப்படவில்லை, அபிவிருத்திகள் ஏதும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

