முட்டையை பதினெட்டு ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியாது என தெரிவித்து முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்தன.

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 20 ரூபாவாகவும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்தார்.
இந்நிலையில் ஒரு முட்டையை பதினெட்டு ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என கூறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தையில் முட்டை விலை குறையும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகளும், நுகர்வோரும் முட்டையை வாங்குவதை தவிர்த்து வருவதாகக் குறித்த சங்கங்கள் கூறியுள்ளன.
இருப்பினும், தற்போதைய உற்பத்தி செலவுகளைக் கருத்தில் கொண்டு, ரூ.18க்கு ஒரு முட்டையை விற்க முடியாது என்று அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டிசம்பர் வரை தட்டுப்பாடு இல்லாமல் முட்டைகளை விற்பனை செய்ய வாய்ப்பிருப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி. அலஹகூன் கூறினார்.
அண்மையில் வெளியாகிய தகவல்களைக் கருத்தில் கொண்டு, முட்டை உற்பத்தியாளர்கள் நெருக்கடியை எதிர்கொண்டால், அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

