மகனை சுட, துப்பாக்கியுடன் அலைந்து கொண்டிருந்த தந்தையை கைது செய்த பொலிஸார்

தனது மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தந்தையை ஆரச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கையில் துப்பாக்கியுடன் ஒருவர் இருப்பதாக ஆரச்சிகட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கு அமைய மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதுடன், அப்போது அவரது மகனுக்கு நான்கு வயது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்ததற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளூரில் தயாரிக்கப்பட்டது என்றும், இது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆரச்சிகட்டுவ பகுதியில் ஒருவர் மூலம் தனக்கு கிடைத்ததாகவும் சந்தேகநபர், பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், துப்பாக்கியும் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

