போதைக்கு எதிரான காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பம்… 23 மற்றும் 28 வயதுடைய இருவர் 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய சகாக்கள் என்று கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள், 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தை பிரதேசத்தில் வத்தளைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் கிடைத்த தகவலின் பேரில் சுற்றிவளைப்பு மேற்கொண்டு, 1 கிலோ 48 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த ஒரு சந்தேகநபரை முதலில் கைது செய்தனர்.
இந்தச் சந்தேகநபர் 23 வயதுடைய பல்லியவத்தை, ஹெந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தச் சந்தேகநபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் மூலம் தெரியவந்த தகவலின் அடிப்படையில், வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோனி மாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்று சோதனை செய்யப்பட்டு, 797 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சந்தேகநபர் 28 வயதான ஹெந்தலை, வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வத்தளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



