News

சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் எமக்கு ஏற்பட்டுள்ள வேதனைகள், வலிகள் நீங்கிவிடும்… நம்பிக்கை வைத்து அவருக்கு வாக்களியுங்கள் ; ரிஷாத் பதியுதின் வேண்டுகோள்

சமூக வாக்குகளால் பதவிக்கு வந்து, கொடுங்கோல் ஆட்சியாளருக்கு விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.



சாய்ந்தமருதில், சனிக்கிழமை (24) நடைபெற்ற கட்சியின் இளைஞர் மாநாட்டில் உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.



இம்மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,



“சந்தர்ப்பவாத அரசியலுக்கு விலைபோனவர்களை கட்சி ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. எங்களைவிட்டுப் பிரிந்த மூவரையும் துணிச்சலுடன் கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம். இதேபோன்று, துணிச்சலான முடிவுகளையே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்க வேண்டும். அப்போதுதான், சமூகத் துரோகிகளுக்கு சிறந்த பாடம்புகட்ட மக்கள் முன்வருவர். துரோகிகளை மன்னிப்பது பின்னர், மீண்டும் கட்சியில் இணைப்பது என்பதெல்லாம் கோமாளித்தன அரசியலாகும். மக்கள் மீது நம்பிக்கையுள்ள தலைமைகள், துரோகிகளை தண்டிப்பதற்கு தயங்கப்போவதில்லை.



மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் வந்த எமது எம்.பிக்கள், கொடுங்கோல் ஆட்சிபுரிந்த கோட்டபாயவை பலப்படுத்தவே இருபதாவது திருத்தத்துக்கு வாக்களித்தனர். பாராளுமன்றத்தில் 144 எம்.பிக்களை வைத்திருந்த இவருக்கு, சில சட்டங்களைத் திருத்துவதற்கு முடியாமலிருந்தது. இதனால், கொடுங்கோல் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்காக, எமது எம்.பிக்களை விலை பேசினார்.

சமூகத்தின் மானத்தை அடகுவைத்து கோட்டாவிடம் இவர்கள் விலைபோகினர். இவர்களின் ஆதரவால் பலமடைந்ததாலேயே, எமது ஜனாஸாக்களை எரிப்பதற்கு கோட்டபாய துணிந்தார். விலைபோன எம்.பிக்களின் உறவினர்கள் எரிக்கப்பட்டிருந்தால், சமூக வலிகளை உணர்ந்திருப்பர். இதனால்தான், சமூக நெறிக்கு உட்பட்டும், நீதிக்குக் கட்டுப்பட்டும் இந்த எம்.பிக்களை தூக்கி எறிந்துள்ளோம்.



சமுதாயத்தை வழிநடத்துவதில் தர்ம வழியில் செல்லும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்கு இறைவனின் உதவி நிச்சயம் கிடைக்கும். மறைந்த தலைவர் அஷ்ரபின் சிந்தனையிலேயே எமது கட்சியும் இளைஞர்களை வழி நடத்துகிறது. உணர்ச்சிகளுக்கு தமிழ் இளைஞர்கள் அடிமையானதால், நாட்டில் பாரிய யுத்தமே மூண்டது.



இது போன்றதொரு நிலைக்கு முஸ்லிம் இளைஞர்கள் சென்றுவிடக்கூடாது. ஒரு சிலரின் தவறுகளைத் தண்டிப்பதற்காக, சமூகத்தையே நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானத்தை எடுத்துவிடாதீர்கள்.



சஹ்ரான் தலைமையில் பத்து இளைஞர்கள் செய்த தவறுகள்தான், எமது சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்கின. இதனால், நானுட்பட எனது குடும்பம், சமூக முன்னோடிகளான சிறந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், மௌலவி ஹஜ்ஜுல் அக்பர், அப்பாவி இளைஞர்கள் மற்றும் எமது தாய்மார்கள் சிறை செல்ல நேரிட்டது. இவை, இன்னும் வேதனைகளாகவும், காயங்களாகவுமே உள்ளன. சாய்ந்தமருதிலும் இதன் தாக்கமும் எதிரொலியும் உணரப்பட்டது.



சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் இந்த வலிகள் நீங்கிவிடும். எனவே, எமது தலைமையில் நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்” என்று குறிப்பிட்டார்.



இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button